முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்புடைய ரூ.100 கோடி மதிப்பிலான 2 அசையா சொத்துகள் முடக்கம்.
தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த ஆர்.வைத்திலிங்கம், ஸ்ரீராம் பிராபர்ட்டீஸ் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனத்துக்கு சென்னை பெருங்களத்தூரில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஐடி நிறுவனங்களுக்கான கட்டிடங்களை கட்டுவதற்கு திட்ட அனுமதி வழங்க ரூ.27.90 கோடி லஞ்சமாக பெற்றதாக அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், அவரது மகன்கள் பிரபு, சண்முகபிரபு, முத்தம்மாள் எஸ்டேட் நிறுவனத்தின் இயக்குநர் பன்னீர்செல்வம், ஸ்ரீராம் பிராபர்டீஸ் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் இயக்குநர் ரமேஷ், பாரத் கோல் கெமிக்கல் நிறுவனம் உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த செப்.19-ம் தேதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதையே அடிப்படையாக கொண்டு சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை தனியாக வழக்கு பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து வைத்திலிங்கம் தொடர்புடைய 13 இடங்களில் அக்டோபர் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன்படி, சென்னையில் 9 இடங்கள், தஞ்சாவூரில் 4 இடங்கள் என நேற்று ஒரே நேரத்தில் 13 இடங்களில் 50-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்புப்படையினர் பாதுகாப்புடன் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்பட்டது.இந்நிலையில் தான் தற்போது வைத்திலிங்கத்துக்கு சொந்தமான ரூ.100.92 கோடி சொத்துகள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பதிவில் அமலாக்கத்துறை, ‛‛தமிழ்நாட்டின் தற்போதைய எம்எல்ஏவும், முன்னாள் வீட்டு வசதி மற்றும் நகர மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். எம்எல்ஏ 2002 சட்டத்தின் அடிப்படையில் கடந்த 9 ம் தேதி வைத்திலிங்கத்தின் ரூ.100.92 கோடி மதிப்பிலான 2 அசையா சொத்துகளை சென்னை மண்டல அமலாக்கத்துறை அலுவலகம் முடக்கி உள்ளது’’ என்று கூறப்பட்டுள்ளது.
Tags : வைத்திலிங்கம் தொடர்புடைய ரூ.100 கோடி