காதலர் தினம் நெல்லையில் எல்லை மீறினால் நடவடிக்கை  போலீசார் எச்சரிக்கை.

by Editor / 13-02-2025 11:38:13pm
காதலர் தினம் நெல்லையில் எல்லை மீறினால் நடவடிக்கை  போலீசார் எச்சரிக்கை.

உலகம் முழுவதும் பிப்ரவரி 14 -ந் தேதியை காதலர் தினமாக கொண்டாடி வருகிறார்கள். வழக்கம்போல் இந்த ஆண்டும் காதலர் தினத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் உள்ள நிலையில்,காதலை வெளிப்படுத்தும் கொண்டாட்டத்திற்கு பலரும் தயாராகி வருகின்றனர்.

வழக்கமாக காதலர் தினத்தில் ஒருவருக்கொருவர் ஆடம்பர பரிசு பொருட்களை கொடுத்து அன்பை பரிமாறிக் கொள்கின்றனர்.காதலர் தின கொண்டாட்டத்தில் இதய பூர்வமான பரிசுகளையும் அவர்கள் கொடுக்கின்றனர்.நெல்லை மாவட்டத்தில் காதலர் தின வாழ்த்து அட்டைகள் விற்பனை கடைகளில் ஏராளமான இளைஞர்கள்-இளம்பெண்கள் சென்று விதவிதமான பல்வேறு வாசகங்கள் அடங்கிய வாழ்த்து அட்டைகளை வாங்கி வருகிறார்கள்.

விதவிதமான கேக்குகள், சாக்லேட்டுகள் உள்ளிட்டவற்றையும் பேக்கரிகளில் சென்று வாங்கி வருகின்றனர். இதற்காக ஒரு வாரத்திற்கு முன்பே ஆர்டரும் செய்துள்ளனர்.

இந்த ஆண்டு பல்வேறு மனதை மயக்கும் வாசகங்கள் அடங்கிய வாழ்த்து அட்டைகள் விற்பனைக்கு வந்துள்ளன. நெல்லையில் உள்ள பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் காதலர் தின விற்பனைக்காக ரெட், ஆரஞ்ச், மஞ்சள், பிங்க் ரோஜா பூக்கள் ஊட்டி கொடைக்கானலில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன.

நெல்லையில் சுற்றுலா தலங்கள் அதிகம் உள்ளதால், காதலர் தினத்தை கொண்டாடஏராளமானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மாநகரில் அறிவியல் மையம் பாளை வ.உ.சி மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அதிகமாக வரக்கூடும் என்பதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் காதலர் தின நாளில் பொது இடங்களுக்கு வருவோர் எல்லை மீறிய செயல்களில் ஈடுபடக்கூடாது. யாராவது அத்துமீறி நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட மற்றும் மாநகர போலீஸ் சார்பில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. நாளை இரவு வரையிலும் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்

 

Tags : காதலர் தினம் நெல்லையில் எல்லை மீறினால் நடவடிக்கை  போலீசார் எச்சரிக்கை

Share via