என் தலை முடியை கூட திமுக அரசால் பிடுங்க முடியாது -சீமான் ஆவேசம்.

தமிழகத்திலிருந்து நாள்தோறும் ஏராளமான கனரக வாகனங்களில் கனிம வளங்கள் கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்டு வரும் நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்தும், கேரளாவிற்கு கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவது தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மலையை காப்போம், மண்ணை மீட்போம் என்கின்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சியினர் சார்பில் இன்று ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகரப் பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் பேசும்போது, இந்த கனிம வள கடத்தலுக்கு எதிராக நடத்தப்படுகின்ற ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி தர மறுக்கின்ற காவல் துறைக்கும் சேர்த்துதான் தாங்கள் போராடுகிறோம் எனவும், ஆங்கிலேயர்கள் கூட நமது பொன்னையும், பொருளையும் மட்டும் தான் எடுத்து சென்றார்கள்.
ஆனால், தற்போதைய திமுக அரசு நமது கனிம வளங்களை திருடி அண்டை மாநிலங்களுக்கு கொடுத்து வருகிறது என பேசினார்.
மேலும், என்னை அசிங்கப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கில் என் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகிறது எனவும், ஆனால் அதை வைத்து என்னை ஒன்றும் செய்ய முடியாது எனவும் பேசினார்.
தொடர்ந்து, பெரியாரைப் பற்றி பேசினால் எனக்கு பிரச்சினை வரும் என்கிறார்கள் ஆனால் என்னை ஒன்றும் செய்ய முடியாது எனவும் யார் பெரியார்? என்கின்ற தலைப்பில் வருகின்ற 8-ம் தேதி ஒரு கருத்தரங்கம் வைத்துள்ளோம் அப்போது தெரியும் யார் பெரியார் என்று என பேசினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திமுக அரசு சீமானின் வழக்கில் தலையிட்டு இருந்தால் இந்த வழக்கு வேறு மாறி சென்றிருக்கும் என்று கூறியதற்கு பதில் அளித்த சீமான், என் தலை முடியை கூட அவர்களால் புடுங்க முடியாது என கூறினார்.
முன்னதாக, சாட்டை துரைமுருகன் மேடையில் பேசும்போது, தென்காசி சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரே ஒரு கனிம வள கொள்ளையராக இருக்கும்போது, எப்படி இந்த கனிம வள கடத்தலை தடுக்க முடியும் என பேசியது குறிப்பிடத்தக்கது.
Tags : என் தலை முடியை கூட திமுக அரசால் பிடுங்க முடியாது -சீமான் ஆவேசம்.