திருவாரூரில் தெரு நாய்களை கொடூரமாக தாக்கி கொன்ற பத்து நபர்கள் மீது வழக்கு.

திருவாரூர் நகரில் கடந்த சில ஆண்டுகளாக தெரு நாய்கள் தொந்தரவு அதிகமாக உள்ளது.இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும் காவல்துறையினருக்கும் நகராட்சி நிர்வாகத்திற்கும் தொடர்ந்து பொதுமக்கள் சார்பாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இதில் நகராட்சி நிர்வாகம் சார்பில் நாய்களுக்கு கருத்தடை ஊசி செலுத்தி கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும் திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட வாசன்நகர் தென்றல்நகர், வடக்குவீதி, தெற்குவீதி, திருமஞ்சனவீதி போன்ற நகரின் முக்கிய வீதிகளில் தெரு நாய்கள் தொந்தரவு அதிகமாக இருந்துவந்தது.
இந்த நிலையில் நேற்றைய முன்தினம் நள்ளிரவு வாசன்நகர் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட மர்மநபர்கள் 20க்கும் மேற்பட்ட தெருநாய்களை அடித்து கொலைசெய்து ஒரு வாகனத்தில் ஏற்றிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இது சம்பந்தமாக பீட்டா அமைப்பைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் சிந்துஜா திருவாரூர் நகர காவல்நிலையத்தில் நாய்களை கொடூரமாக தாக்கி கொன்ற மர்மநபர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி புகார் கொடுத்திருந்தார்.
இது சம்பந்தமாக திருவாரூர் நகர காவல் துறையினர் அடையாளம் தெரியாத 10 நபர்கள் மீது விலங்குகளை துன்புறுத்துதல் சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Tags : திருவாரூரில் தெரு நாய்களை கொடூரமாக தாக்கி கொன்ற பத்து நபர்கள் மீது வழக்கு.