வேங்கை வயல் விவகாரம் : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

வேங்கை வயல் விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணை முழுமையாக இல்லை என்ற மனுதாரர் வி.மார்க்ஸ் ரவீந்திரன் தரப்பு குற்றச்சாட்டு குறித்து பதிலளிக்கும் படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று 27.03.2025 வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியை அசுத்தம் செய்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்திரன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகள், தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது ஷபிக் அடங்கிய அமர்வில் இன்று 27.03.2025 மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், இந்த வழக்கில் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி மனு தாக்கல் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ஏற்கனவே உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசின் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாரர் மார்க்ஸ் ரவீந்திரன் தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த சென்ற மனுதாரர் வேங்கைவயல் கிராமத்திற்கு சென்று விசாரித்த போது, குற்றத்தை ஒப்புக் கொள்ளும்படி காவல்துறையினர்
மிரட்டியதாகவும், அரசு வேலை தருவதாக ஆசை வார்த்தை கூறியதாகவும், கிராம மக்கள் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.
சொந்த சமுதாய மக்கள் குடிக்கும் குடிநீரில் எப்படி அசுத்தம் செய்வார்கள் என்று கேள்வி எழுப்பிய மனுதாரர் மார்க்ஸ் ரவீந்திரன் தரப்பு வழக்கறிஞர்,ஜி.எஸ்.மணி,
காவல்துறை விசாரணை முழுமையாக இல்லை என்றும் உச்சநீதிமன்ற உத்தரவின் படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலும் கூட வழக்கு விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்றலாம் என்றும் வாதிட்டார்.
மேலும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தில்
“தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிசிஐடி போலீஸார் இந்த வழக்கை முழுமையாக விசாரிக்கவில்லை. இந்த விசாரணையில் திருப்தியில்லை என்பதால்தான் சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோருகிறோம். வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையிலான ஒருநபர் ஆணையமும் தனது இறுதி அறிக்கையை இதுவரையிலும் தாக்கல் செய்யவில்லை.தமிழக அரசின் அழுத்தம் காரணமாக சிபிசிஐடி போலீஸார் கடந்த 2 ஆண்டுகளாக இந்த வழக்கை சுதந்திரமாக, சரியான கோணத்தில் விசாரிக்கவில்லை. பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களையே குற்றவாளிகளாக சித்தரித்துள்ளனர். வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவுகளை நீக்கி காலதாமதமாக குறைபாடுடைய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். இது தொடர்பாக மனுதாரர் தரப்பில் பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது
மனுதாரர் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மனுதாரர் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூன் 12-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்…
Tags : வேங்கை வயல் விவகாரம் : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.