செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு: எடப்பாடி – தி.மு.க. வாக்குவாதம்

by Editor / 23-08-2021 04:56:06pm
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு: எடப்பாடி – தி.மு.க. வாக்குவாதம்

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் தி.மு.க. உறுப்பினருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது.

செம்பரம்பாக்கம் ஏரி உடைய வில்லை. உபரிநீர் திறக்கப்பட்டது என்று எடப்பாடி பழனிசாமி தி.மு.க. புகாருக்கு பதிலளித்தார்.

தமிழக சட்டசபையில் இன்று நீர்வளத்துறை மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தில் அணைக்கட்டு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் பேசும்போது, திமுக ஆட்சியில் புழல் ஏரியில் தண்ணீர் நிரம்புகிறது என தெரிந்தவுடன் அன்றைய முதல்வர் கருணாநிதி உடனே நேரடியாக சென்று அதை பார்வையிட்டார். ஆனால் அண்ணா தி.மு.க. ஆட்சியில் செம்பரம்பாக்கம் ஏரி நீர் நிரம்பி உடைந்தது. ஆனாலும் அப்போதைய முதல்வர் சென்று பார்க்கவில்லை என பேசினார்.

அப்போது எடப்பாடி பழனிசாமி எழுந்து செம்பரம்பாக்கம் ஏரி உடையவில்லை. உபரிநீர் ஏரியிலிருந்து திறந்து விடப்பட்டது என்று விளக்கம் அளித்தார்.

நந்தகுமார் பேசுகையில், அணை நிரம்பி இருந்த போது அதனை திறப்பதற்காக முதலமைச்சரின் உத்தரவுக்கு காத்திருந்தார்கள் என்று கூறினார்.

அப்போது எதிர்கட்சி தலைவர் எடப்பாடிபழனிசாமி எழுந்து விளக்கமளித்தார்.

செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி அதன் உபரி நீர் வழிந்தது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு கீழே நூற்றுக்கு மேற்பட்ட ஏரிகள் உள்ளன. அந்த ஏரிகளும் நிரம்பி வழிந்ததால் சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஒரே நாளில் 60 செ.மீ. மழை பெய்தது. எனவே அணைக்கு அதிக நீர்வரத்து இருந்தது. மற்றும் 100 ஏரிகளும் நிரம்பியதால் உபரிநீர் வெளியே வந்தது. எனவே வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அணை உடையவில்லை. ஏரிகள் திறப்பதற்கு முதல்வரின் அனுமதி பெற வேண்டியதில்லை. அங்குள்ள அதிகாரிகளே அதை முடிவு செய்து கொள்வார்கள். ஏரியை திறக்க எந்த அனுமதி இல்லை. அது போன்ற நடைமுறை இல்லை என கூறினார்.செல்வபெருந்தகை (காங்கிரஸ்) கூறுகையில், எனது தொகுதியில் தான் செம்பரபாக்கம் ஏரி உள்ளது. அந்த அணை நிரம்பிய போது அதை திறப்பதற்கு அப்போதைய முதல்வர் அனுமதி பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டதாக அப்போதே கூறினார்கள் என்று கூறினார்.

அப்போது எடப்பாடி பழனிசாமி எழுந்து, ஏரியில் குறிப்பிட்ட அளவுக்கு தண்ணீர் வந்த பின் தான் நீரை வெளியேற்ற முடியும். சென்னையை சுற்றி 100 ஏரிகளில் தண்ணீர் நிரம்பி இருந்ததை மறந்து விட்டார்கள். அதிலிருந்து வெளியேறிய தண்ணீர் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீர் அனைத்தும் வந்து சென்னைக்கு பாதிப்பு ஏற்பட்டது.

நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் எழுந்து பேசினார். அவர் பேசும்போது, இந்த சட்டமன்றத்தில் ஜனநாயகத்தை மதிக்கும் வகையில் எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்புகள் உடனுக்குடன் வழங்கப்படுவது மகிழ்ச்சி. செம்பரபாக்கம் ஏரி குறித்து சிஏஜி அறிக்கை சொன்னதை நான் கவனத்தில் கொண்டு வருகிறேன் சிஏஜி அறிக்கை இரண்டு ஆண்டு காலமாக தாக்கல் செய்யாமல் தாமதமாக இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு வைத்தனர் ஏன் வைக்கவில்லை என நாங்கள் கேட்டபோது ஏஜியின் அறிக்கையில் எங்களுக்கு திருப்தி இல்லை அவருக்கு நினைவூட்டல் அனுப்பினோம் அவரிடம் இருந்து பதில் இல்லை என கூறினார்கள். அதில் அந்த அறிக்கையில் 2015 முன்பு மூன்று வருடமாக பேரிடர் மேலாண்மை கூட்டம் நடத்தப்படவில்லை. அதனால் எந்த விதிமுறைகளும் வகுக்கப்படவில்லை. இதில் யாருக்காவது மாற்றுக்கருத்து இருந்தால் பேசுங்கள் என கூறினார்.

 

Tags :

Share via