யூடியூபர் மதன் ஜாமீன் மனு மீது காவல்துறை பதிலளிக்க : நீதிமன்றம் உத்தரவு
தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டான பப்ஜி விளையாட்டின் மூலம் சிறுவர் சிறுமிகளுடன் ஆபாசமாக பேசி அதை யூடியூப் மூலம் வெளியிட்டு லட்சக்கணக்கில் பணம் பறித்தாக யூடியூபர் மதன் மீது புகார் எழுந்தது.
இதையடுத்து மதன் மீது தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவது உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, சைபர் கிரைம் பிரிவு காவல்துறை விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பினர்.இதன் காரணமாக தலைமறைவாக இருந்த பப்ஜி மதனை தருமபுரியில் காவல்துறையினர் ஜூன் 18 ஆம் தேதி கைது செய்தனர். இதனையடுத்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஜூன் 19-ம் தேதி ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி மதன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சைதாபேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில் ஜாமீன் கோரி மதன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள ‘சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற’ நீதிபதி செல்வக்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மதன் தரப்பில், பெண்களுக்கு எதிராக எந்த குற்றத்தையும் செய்யவில்லை என்றும் கடந்த 13 நாட்களாக சிறையில் இருந்து வருவதாகவும், குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரம் இல்லை எனவும், காவல்துறை தன்னை விசாரித்து விட்டதால் ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.
அரசு தரப்பு வாதத்தில் ஜாமீன் மனு மீது காவல்துறையின் விளக்கம் பெற்று தெரிவிப்பதாக கூறினார்.
இதனையடுத்து மனு தொடர்பாக காவல்துறை பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணை வரும் ஜூலை 5-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
Tags :