பேனா தூண், உதயசூரியன் வடிவத்தில் கருணாநிதி நினைவிடம்: மாதிரி வரைபடம்
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு அமைக்கப்படவுள்ள நினைவிடத்தின் மாதிரி வரைபடம் வெளியானது.
திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்கப்படும் என, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அவர் இதனை அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடும் முதல் அறிவிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், "தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சாதனைகளை, சிந்தனைகளைப் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில், காமராஜர் சாலையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்படும்.
அண்ணா நினைவிட வளாகத்தில் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே நினைவிடம் அமைக்கப்படும். அந்த நினைவிடத்தில் கருணாநிதியின் வாழ்க்கை, சிந்தனை அடங்கிய நவீன ஒளிப்படங்கள் இடம்பெறும்" என்றார்.
இந்த அறிவிப்பை வரவேற்றுப் பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், "கருணாநிதிக்கு நினைவிடம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வரவேற்கிறேன். அவரைப் பற்றிய அனைத்துச் சிறப்பம்சங்களும் நினைவிடத்தில் இடம்பெறக் கோரிக்கை வைக்கிறேன். என் தந்தை தீவிர கருணாநிதி பக்தர். அவர் பெட்டியில் எப்போதும் கலைஞரின் 'பராசக்தி' பட வசனப் புத்தகம் இருக்கும்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், கருணாநிதிக்கு அமைக்கப்படவுள்ள நினைவிடத்தின் மாதிரி வரைபடம் வெளியாகியுள்ளது. இதனை முதல்வர் ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், உதயசூரியன் வடிவில் கருணாநிதி நினைவிடமும், பிரம்மாண்டமான பேனா வடிவிலான தூணும் இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்த தன் ட்விட்டர் பதிவில், "எழுத்தால் கலையுலகை ஆண்டு - கொண்ட கொள்கையால் அரசியல் வானில் ஒளிர்ந்த சூரியன் 'தமிழினத் தலைவர்' கருணாநிதி நினைவிடத்தின் மாதிரித் தோற்றம்!" என ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
Tags :