மனைவியை கொன்று புதைத்த விவசாயி கைது- நடத்தையில் சந்தேகப்பட்டு தீர்த்து கட்டியது அம்பலம்
கர்நாடக அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொன்று புதைத்த விவசாயியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா கல்லுவீரனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராஜூ. விவசாயியான இவருக்கும், அவரது மனைவி ராணிக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் கணவன், மனைவி இடையே மீண்டும் குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சிவராஜூ தனது மனைவியை சரமாரியாக தாக்கி உள்ளார்.
இந்த தாக்குதலில் ராணி நிலைகுலைந்து கீழே விழுந்தார். பின்னர் சிவராஜூ, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ராணியை சரமாரியாக குத்தி உள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே ராணி உயிரிழந்தார். இதையடுத்து சிவராஜூ உயிரிழந்த ராணியின் உடலை வீட்டின் பின்புறம் உள்ள வாழை தோட்டத்தில் புதைத்து விட்டு தப்பியோடி தலைமறைவானார்.
இதையறிந்த வாழை தோட்ட உரிமையாளர் சதீஷ் மலவள்ளி புறநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் மலவள்ளி தாசில்தார் முன்னிலையில் போலீசார் ராணியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர். முதற்கட்ட விசாரணையில், குடும்பத்தகராறில் சிவராஜூ, மனைவி ராணியை கொன்று வாழைதோட்டத்தில் புதைத்துவிட்டு தலைமறை வானது தெரியவந்தது.
இதுகுறித்து மலவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சிவராஜூவை வலைவீசி தேடி வந்தனர். இந்த சம்பவம் மண்டியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சிவராஜூ, மலவள்ளியில் உள்ள ஒரு வீட்டில் தலைமறைவாகி இருப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சிவராஜூவை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
இந்த கொலை பற்றி அவரிடம், போலீஸ் நடத்திய விசாரணையில், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்தது தெரியவந்தது. மேலும் சிவராஜூ, இதற்கு முன்பு தனது மனைவி ராணியுடன் பெங்களூருவில் வசித்து வந்துள்ளார். கொலை குற்றச்சாட்டில் சிவராஜ் 7 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 6 மாதங்களுக்கு முன்பு தான் சிவராஜூ சிறையிலிருந்து விடுதலையாகி உள்ளார்.
சிறையில் இருந்து வந்ததும் மனைவி ராணியை அழைத்துக்கொண்டு தனது சொந்த கிராமமான கல்லுவீரனஹள்ளிக்கு வந்து இருந்தார். இந்த நிலையில் நடத்தையில் சந்தேகம் அடைந்து சிவராஜூ, மனைவி ராணியை கொன்றது தெரியவந்துள்ளது.
Tags :