‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை இன்று (ஆகஸ்ட் 02) சென்னையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் 1,256 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதயம், அறுவை சிகிச்சை, நரம்பியல், பொது மருத்துவ நிபுணர்கள் இந்த முகாம்களில் பங்கேற்க உள்ளனர். 17 சிறப்பு மருத்துவ சேவைகள் வழங்கப்படும் இந்த முகாம்கள் சனிக்கிழமை தோறும் நடைபெறும். சென்னையில் 15 மண்டலங்களில் முகாம்கள் நடத்தப்படவுள்ளது.
நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட பயன்?
முதியவர்கள் இயலாமை, நெருக்கமான மருத்துவ வசதி இல்லாமை போன்ற காரணங்களால் சிகிச்சைக்கு செல்ல முடியாத சூழ்நிலையில் இருப்பார்கள். இந்த திட்டம் மூலம், அவர்கள் வசிக்கும் இடத்துக்கு அருகிலேயே சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுவதால், அவர்களுக்கு பயனாகும்.
கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு பெரும்பாலும் நகர மருத்துவமனைகள் மிகவும் தொலைவில் இருக்கும். இத்திட்டத்தின் மூலம் அரசு மருத்துவக் குழுவே நேரில் வந்து சிகிச்சை அளிப்பதால், அவர்கள் நேரம், செலவு ஆகியவற்றை மிச்சப்படுத்தலாம்.
பயணிக்க முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு இத்திட்டம் மிகப்பெரும் நிவாரணமாக இருக்கும். அவர்கள் அருகிலேயே வரும் இந்த முகாம்களில் எளிதாக சிகிச்சை பெற முடியும்.
பெண்களுக்கு தேவையான பிரத்தியேக மருத்துவ பரிசோதனைகள், தாய்ப்பால் ஊக்குவிப்பு, இரும்புசத்து குறைபாடுகள் மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறை சிகிச்சை ஆகியவை வழங்கப்படும். குழந்தைகளுக்கான தடுப்பூசி, வளர்ச்சி கண்காணிப்பு, குழந்தை நல பரிசோதனைகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்படும்.
இரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய் போன்ற நிலைத்த நோய்கள் கொண்டவர்கள், அவற்றைக் கட்டுப்படுத்த வழிகாட்டல்களை இம்முகாம்களில் பெற முடியும். அவர்களுக்கான தொடர்ந்து கண்காணிப்பு வசதியும் ஏற்பாடு செய்யப்படும்.
தினமும் வேலைக்குச் செல்வதால் மருத்துவமனை செல்ல முடியாதோர், கட்டண மருத்துவம் செலுத்த முடியாதோர் ஆகியோருக்கு இத்திட்டம் இலவசமாக சிகிச்சை வழங்குவதால், அவர்களுக்கு நேரடி நன்மை.
பள்ளிகளில் மருத்துவ பரிசோதனை முகாம் மூலம் மாணவர்களின் பார்வை, ஊட்டச்சத்து குறைபாடு, பல் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஆகியவை கண்டறியப்படுகின்றன.
Tags : ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.