நெல்லையப்பர் கோவிலுக்கு புதிய யானைக்குட்டி.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலுக்கு புதிய யானைக்குட்டி ஒன்று கொண்டு வரப்படுகிறது. இந்த கோவிலில் காந்திமதி என்ற பெண் யானை இருந்தது. சமீபத்தில் அது உயிரிழந்தது. அதன் மரணத்திற்குப் பிறகு, புதிய யானை ஒன்றை கோவிலுக்கு கொண்டு வர வேண்டும் என பக்தர்களும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, இந்து சமய அறநிலையத் துறை மற்றும் வனத்துறை இணைந்து உத்தரகாண்ட் மாநிலத்திலிருந்து யானைக்குட்டி ஒன்றை வாங்க நடவடிக்கை எடுத்தன.
புதிய யானைக்குட்டி தேர்வு செய்யப்பட்டுவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தக் குட்டியை உத்தரகாண்டில் இருந்து மதுரைக்கு சிறப்பு விமானம் மூலம் கடுமையான பாதுகாப்புடன் கொண்டு வந்து, அங்கிருந்து லாரியில் திருநெல்வேலிக்குக் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெல்லையப்பர் கோவிலுக்குக் கொண்டு வரப்படவுள்ள யானைக்குட்டியின் படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: “உத்தரகாண்டிலிருந்து நெல்லையப்பர் கோவிலுக்கு யானைக்குட்டி கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் புதிய யானைக்குட்டி வந்து சேரும்” என்றனர். இந்த செய்தி, தென் மாவட்டங்களிலிருந்தும் மட்டுமல்லாது, தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்த பக்தர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி அளித்துள்ளது.
Tags : நெல்லையப்பர் கோவிலுக்கு புதிய யானைக்குட்டி