மதுரை மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்துக்கு ஒப்பந்ததாரரின் மெத்தன போக்கே காரணம்: அமைச்சர் எ.வ.வேலு குற்றச்சாட்டு

by Admin / 29-08-2021 06:12:22pm
மதுரை மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்துக்கு ஒப்பந்ததாரரின் மெத்தன போக்கே காரணம்: அமைச்சர் எ.வ.வேலு குற்றச்சாட்டு


மதுரை மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்துக்கு ஒப்பந்ததாரரின் மெத்தன போக்கே காரணம் என அமைச்சர் எ.வ.வேலு, குற்றம் சாட்டியுள்ளார்.
 
மதுரை-செட்டிக்குளம் இடையே நத்தம் சாலையில் சுமார் ஏழரை கிலோ மீட்டர் நீளத்திற்கு மேம்பாலம்  கட்டப்பட்டு வருகிறது. மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்துடன் பிரமாண்டமாக கட்டப்பட்டு வந்த இந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி நேற்று மாலை திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் பணியில் இருந்த வட மாநில தொழிலாளர்கள் 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து, குறித்து, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஹைட்ராலிக் தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், விபத்து தொடர்பாக, மேம்பால பணி திட்ட பொறுப்பாளர், பொறியாளர் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகிய மூன்று பேர் மீது தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இதனிடையே, அமைச்சர் எ.வ.வேலு விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விபத்திற்கு முழுக்க முழுக்க ஒப்பந்ததாரரின் மெத்தனப்போக்கே காரணம் என குற்றம் சாட்டிய அவர், ஒப்பந்ததாரர், பெறியாளர் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

 

Tags :

Share via