தமிழக அமைச்சர்கள் பல மாதங்களாக சிறையில் இருந்துள்ளனர்- அமித்ஷா.

நெல்லையில் நடைபெற்ற பாஜகவின் பூத் கமிட்டி மாநாட்டில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார். அப்போது,
அமித் ஷா பேசுகையில், “காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் ஒரே லட்சியம், தனது மகன் ராகுல் காந்தியை இந்திய நாட்டின் பிரதமராக அமர வைப்பதுதான். அதேபோல, தி.மு.க.வின் கனவு, முதலமைச்சர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினை தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சராக ஆக்குவதுதான்” என்று கூறினார்.
ஆனால், இந்த இரண்டுமே நடக்காது என்றும் அமித் ஷா திட்டவட்டமாகக் கூறினார். நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியே (என்.டி.ஏ.) வெற்றி பெறும் என்றும், அதேபோல, தமிழகத்திலும் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.
தமிழக அமைச்சர்கள் பொன்முடியும், செந்தில் பாலாஜியும் பல மாதங்களாக சிறையில் இருந்துள்ளனர்; அவர்கள் ஆட்சியாளர்களாகவும் இருக்க வேண்டுமா? என மத்திய அமைச்சர் அமித்ஷா கேள்வியெழுப்பியுள்ளார். நெல்லையில் நடைபெறும் பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் பேசிய அவர், 130-வது சட்டத்திருத்தத்தை 'கறுப்பு சட்டம்' என்கிறார் ஸ்டாலின்; அதை சொல்ல அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஏனெனில் அவர் கறுப்பு நடவடிக்கைகளை செய்பவர் என்றார்.
பாஜக பூத் கமிட்டி மாநாடு நடைபெற்று வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடியின் ஆட்சி முறை, மற்றும் சி.பி. ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குறித்துப் பேசினார்.
அமித் ஷா தனது உரையில், பிரதமர் மோடியின் ஆட்சி திருக்குறள் அடிப்படையில் நடப்பதாகப் பாராட்டினார். “ஒரு நல்ல அரசன், சிறந்த சேனையைக் கொண்டவனாக இருக்க வேண்டும்” என்ற திருக்குறளின் கருத்துக்கு ஏற்ப, பிரதமர் மோடி ஆட்சி செய்கிறார் என்றும், அவரது அரசாங்கம் வலிமையானதாகவும், மக்களைக் காப்பதாகவும் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், சி.பி. ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவித்ததற்குப் பிரதமர் மோடிக்கு அவர் நன்றி தெரிவித்தார். “அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கும்போது, சி.பி. ராதாகிருஷ்ணன் இந்தியாவின் புதிய குடியரசு துணைத் தலைவராக இருப்பார்” என்று அமித் ஷா நம்பிக்கைத் தெரிவித்தார்.

Tags : தமிழக அமைச்சர்கள் பல மாதங்களாக சிறையில் இருந்துள்ளனர்- அமித்ஷா.