ஆலங்குளம்  சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக ஹரிநாடார் அறிவிப்பு.

by Staff / 15-09-2025 03:25:42pm
ஆலங்குளம்  சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக ஹரிநாடார் அறிவிப்பு.

தென்காசி மாவட்டம்  ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் அடிப்படை வசதிகள் பற்றாக்குறை இருப்பதாக  கூறி சத்திரிய சான்றோர் படையின் நிறுவனத் தலைவர் ஹரிநாடார், தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் கொடுத்த நிலையில், புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சி தலைவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும், மத்தளம்பாறை பகுதியில் காமராஜர் சிலை நிறுவவும் கோரிக்கை மனு ஹரிநாடார் சார்பில் வழங்கப்பட்ட நிலையில், தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது, அவர் கூறும் போது ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், குறிப்பாக அரசு மருத்துவமனையில் எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லாத காரணத்தினால் நோயாளிகள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகுவதாகவும் குற்றம் சாட்டிய அவர், நாடார்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் சத்திரிய சான்றோர் படை கண்டிப்பாக போட்டியிடும் எனவும், தான் ஆலங்குளம் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாகவும் தெரிவித்தார்.

மேலும், நாடார் சமூகத்தை சேர்ந்த ஏராளமான சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தும், நாடார் இன மக்களின் கோரிக்கையை சட்டமன்றத்தில் எடுத்துரைக்காத காரணத்தினால்,  தான் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாகவும், குறிப்பாக திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கில் கூட இதே நிலைமை இருந்த காரணத்தினால் தான், அவரது குடும்பத்தினரையும் நேரில் சென்று சந்தித்து அவருக்கு தான் ஆறுதல் கூறி தேவையான உதவிகளை செய்ததாகவும் ஹரிநாடார் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags : ஆலங்குளம்  சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக ஹரிநாடார் அறிவிப்பு.

Share via