பட்டாசு ஆலை விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்-முதலமைச்சர்.

by Staff / 17-09-2025 10:14:48pm
பட்டாசு ஆலை விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்-முதலமைச்சர்.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள கங்கர்செவல்பட்டியில் சத்திரப்பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ளதால் பட்டாசு உற்பத்தி தீவிரமடைந்துள்ளது.ஏராளமான  தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த நிலையில் ஒரு அறையில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரித்தபோது உராய்வு ஏற்பட்டு பட்டாசு மருந்து வெடித்துச் சிதறியுள்ளது. இந்த வெடி விபத்தில் அந்த அறையில் பணியாற்றிக்கொண்டிருந்த  இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த கவுரி (50) என்பவர் உயிரிழந்தார்.

மேலும், வெம்பக்கோட்டை கண்டியாபுரத்தைச் சேர்ந்த குமரேசன் (30), மேகலை (21), மாரனேரியைச் சேர்ந்த மாரியம்மாள் (40), அப்பகுதியைச் சேர்ந்த சிவரஞ்சினி (39), காளிமுத்து (45), ஜெயலட்சுமி (55) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

தகவலறிந்த வெம்பக்கோட்டை, ஏழாயிரம்பண்ணை தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஆலங்குளம் போலீஸார் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த 6 பேரும் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், உயிரிழந்த கவுரி உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக   சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து ஆலங்குளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 பட்டாசு ஆலையில்   ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

 

Tags : முதலமைச்சர்

Share via

More stories