திமுகவை யாராலும் அழிக்க முடியாது-கரூரில் முதல்வர்.
.கரூர் மாவட்டம், கோடங்கிப்பட்டியில் இன்று முப்பெரும் விழா நடைபெற்றது. இதில், பெரியார் விருது, திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழிக்கும், அண்ணா விருது, பாளையங்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவர் சுப. சீத்தாரமனுக்கும், கலைஞர் விருது, நூற்றாண்டு கண்டவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான சோ.மா. ராமச்சந்திரனுக்கும், பாவேந்தர் விருது, குளித்தலை சிவராமனுக்கும், பேராசிரியர் விருது, சட்டப்பேரவை முன்னாள் கொறடா மருதூர் ராலிங்கத்துக்கும், மு.க. ஸ்டாலின் விருது முன்னாள் அமைச்சர் நா. பழனிச்சாமிக்கும், இந்த வருடம் புதிதாய் அறிமுகம் செய்த முரசொலி செல்வம் விருது மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வனுக்கும் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் திமுக தலைவரும்,முதல்வருமான மு.க ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது:
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முப்பெரும் விழா அதன் வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கற்களையும், முக்கிய தலைவர்களின் பங்களிப்புகளையும் கொண்டாடும் ஒரு நிகழ்வாகும். குறிப்பாக பெரியார் பிறந்தநாள், அறிஞர் அண்ணா பிறந்தநாள் மற்றும் திமுக துவக்க நாள் ஆகிய மூன்றையும் இணைத்து திமுக முப்பெரும் விழாவாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை மூன்று நாள் நடைபெறும்.
அதன்படி கரூர் மாவட்டம், கோடங்கிப்பட்டியில் இன்று முப்பெரும் விழா நடைபெற்றது. இதில், உரையாற்றிய தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், “76 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் கொட்டும் மழையில் அறிஞர் அண்ணா ராபின்சன் பூங்காவில் திமுகவை துவக்கி வைத்தார்.பொதுக்கூட்டம் என்று சொல்லிவிட்டு மாபெரும் எழுச்சி மாநாட்டை நடத்தி இருக்கிறார் செயல்வீரர் செந்தில் பாலாஜி. மேற்கு மண்டல எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக அவர் இருக்கிறார். அதனால்தான் அவர் வெளியில் இருந்தால் நம்மால் நிம்மதியாக தூங்க முடியாது என அவரை முடக்கப்பார்த்தார்கள். திமுக வரலாற்றில் இப்படி ஒரு பிரம்மாண்டமான முப்பெரும் விழா நடந்திருக்காது என்பதை நான் உறுதியாக சொல்கிறேன்.
2019ஆம் ஆண்டு முதல் நாம் எதிர்கொண்ட அனைத்து தேர்தல்களிலும் எதிரிகளை கலங்கடிக்கும் வகையிலான தொடர் வெற்றியை பெற்றுவருகிறோம். இந்த வெற்றி 2026 சட்டமன்றத் தேர்தலிலும் நிச்சயம் தொடர்ந்து, திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும். உங்களைப் போன்ற தொண்டர்களை கொண்ட திமுகவை யாராலும் அழிக்க முடியாது.
உங்களுக்குத் தலைமை தொண்டனாக நான் இருப்பது வாழ்க்கையில் நான் பெற்ற பெரும்பேறு.தமிழ்நாட்டை காக்கும் காவல் அரண் திமுக மட்டும்தான். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறு செய்வது காவி கொள்கை என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். அந்த கொள்கையின் அரசியல் முகம் பாஜக. இரு தினங்களுக்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜக என உண்மையை பேசியுள்ளார். அந்தக் கைப்பாவை அரசை தமிழ்நாட்டு மக்கள் தூக்கி எறிய திமுகதான் காரணம் என நம்மீது பாஜக வன்மத்தை கொட்டிக்கொண்டுவருகிறது. திமுக மிரட்டலுக்கு அஞ்சும் கட்சியா?
இந்தியாவில் முதல் மாநில கட்சி திமுக தான் மாநிலத்தில் ஆட்சியை பிடித்தது. 75 ஆண்டு வரலாறு நமக்கு இருக்கிறது. அதன்பின் வந்த கட்சிகளும், இப்போதும் சிலர் திமுகவுக்கு நாங்கள் தான் மாற்று என்கிறார்கள். சொன்னவர்கள் எல்லாம் மாறிவிட்டார்கள்; மறைந்துவிட்டார்கள். இந்தியாவிலே இரட்டை இலக்கு பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலம் தமிழ்நாடு.
ரெய்டுகளில் இருந்து காப்பாற்றிக்கொள்ள அதிமுகவை அடகு வைத்தவர், திராவிடம் குறித்து கேட்டபோது அது எனக்கு தெரியாதவர் என சொன்ன எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தலைமை பொறுப்பில் இருக்கிறார். அதிமுகவை துவங்கியபோது கொள்கை அண்ணாயிசம் என்றார்கள். அதனை எடப்பாடி பழனிசாமி அடிமையிசம் என மாற்றி அமித்ஷாவே சரணம் என மொத்தமாக சரணடைந்துவிட்டார்.
முழுதாய் நனைந்தப் பின் முக்காடு எதற்கு என கேட்பார்கள். அதுபோல், நேற்று டெல்லியில் கார் மாறி மாறி சென்ற எடப்பாடி பழனிசாமியை பார்த்து, காலிலேயே விழுந்தபின் முகத்தை மறைக்கக் கைகுட்டை எதற்கு என்று கேட்கிறார்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் எனும் மாண்பு இல்லாமல் என்னை ஒருமையில் பேசிக்கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதில், அவரின் தரம் தாழ்ந்த பேச்சுக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டுமா? ஆனால், மக்கள் ஆட்சியில் மக்களுக்கு மதிப்பளித்து, செயலாலும், திட்டங்களாலும் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.
ஒன்றிய அரசுடன் போராடி தலைநிமிர்த்தும் தமிழ்நாட்டை ஒருநாளும் தலை குனியவிடமாட்டோம். என பேசினார்.
Tags : திமுகவை யாராலும் அழிக்க முடியாது-கரூரில் முதல்வர்.



















