வல்லநாட்டில் குடிபோதையில் தலைமை காவலரை தாக்கிய மூன்று ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டை அடுத்த பாறைக்காடு ஈச்சந்தா ஓடை செல்லும் சாலையில் முறப்பநாடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு திறந்தவெளியில் அமர்ந்தபடி சிலர் மது அருந்திக் கொண்டிருந்தனர்.
அங்கு வந்த முறப்பநாடு உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம் மற்றும் காவலர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் மதுபோதையில் இருந்தவர்களை வீட்டிற்கு செல்லுமாறு தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த நபர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கிருந்த போலீசார் முறப்பநாடு காவல்நிலையத்திற்கு தொடர்பு கொண்டுள்ளனர். உடனடியாக முறப்பநாடு காவல் உதவி ஆய்வாளர் சங்கரலிங்கம் மற்றும் தலைமை காவலர் திருமணி செல்வம் ஆகிய இருவரும் சம்ப இடத்திற்கு வந்து அங்கிருந்த வல்லநாடு பகுதியைச் சேர்ந்த உத்தண்ட ராமன்(26), சிந்தாமணி (23), வட வல்லநாடு பகுதியை சேர்ந்த தம்பான் (26) ஆகிய மூவரையும் ஜீப்பில் ஏற்ற முயன்றனர். அந்த சமயத்தில் போலீசாருக்கும் மது அருந்தியவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
அப்போது மதுபோதையில் இருந்த மூவரும் தலைமை காவலர் திருமணி செல்வத்தை முகத்தில் தாக்கியதில் அவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதையடுத்து மதுபோதையில் இருந்த மூவரையும் கைது செய்த போலீசார் விசாரணை வருகின்றனர். போலீசாரை தாக்கியதாக கைது செய்யப்பட்ட மூவர் மீதும் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags : வல்லநாட்டில் குடிபோதையில் தலைமை காவலரை தாக்கிய மூன்று ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.