பொங்கல் பண்டிகை வேட்டி – சேலை: முதல் தவணை ரூ.157 கோடிக்கு அரசு அனுமதி

by Editor / 06-09-2021 06:02:07pm
பொங்கல் பண்டிகை வேட்டி – சேலை: முதல் தவணை ரூ.157 கோடிக்கு அரசு அனுமதி

அடுத்த ஆண்டு (2022) பொங்கல் பண்டிகைக்கு வேட்டி மற்றும் சேலை வழங்கும் திட்டத்தினை செயல்படுத்த முதல் தவணைத் தொகை ரூபாய் 157.38 கோடி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி சட்டசபையில் இன்று தெரிவித்தார்.

புவிசார் குறியீடு சட்டத்தின் கீழ் நெகமம் சேலைகள், வீரவநல்லூர் செடிபுட்டா சேலைகள் மற்றும் உறையூர் பருத்தி சேலைகள் பதிவு செய்ய கைத்தறி துறையால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

2021 22ம் ஆண்டுக்கான கொள்கை விளக்கக் குறிப்பை அவர் சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

‘‘1999ம் ஆண்டு புவிசார் குறியீடு சட்டத்தின் கீழ் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உற்பத்தி செய்யப்படும் தனித்தன்மை வாய்ந்த பொருட்களை பதிவு செய்து புவிசார் குறியீடு பெறுவதாகும் என்றும், இதன் மூலம் தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு சட்டரீதியான பாதுகாப்பை வழங்குவதோடு,புவிசார் குறியீடு பெறாத இனங்களை புவிசார் குறியீடு பெற்ற இனங்களாக எண்ணி தவறுதலாக நுகர்வோர்கள் வாங்குவதிலிருந்து பாதுகாக்கப்படும்.

மேலும், புவிசார் குறியீடு பதிவு பெற்ற பொருட்களின் விற்பனை மேம்படுவதுடன் உலக வர்த்தக அமைப்பு ஒப்பந்தத்தில் ஒரு அங்கமான அறிவுசார் சொத்துரிமை வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்திட ஊக்குவிக்கப்படும்.

புவிசார் குறியீடு சட்டத்தின் கீழ் கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில், காஞ்சிபுரம் பட்டு சேலைகள், பவானி ஜமக்காளம், மதுரை சுங்குடி சேலைகள், சேலம் வெண்பட்டு வேட்டி, ஆரணி பட்டு சேலைகள், கோவை கோரா காட்டன் சேலைகள்,திருபுவனம் பட்டு சேலைகள் மற்றும் கண்டாங்கி சேலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் இச்சட்டத்தின் கீழ் நெகமம் சேலைகள், வீரவநல்லூர் செடிபுட்டா சேலைகள் மற்றும் உறையூர் பருத்தி சேலைகள் பதிவு செய்ய துறையால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.

 

Tags :

Share via