காலமானார் எழுத்தாளர் கு.ராஜவேலு
நூறாண்டுகள் கடந்த மூத்த எழுத்தாளர் கு.ராஜவேலு (101) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் வியாழக்கிழமை காலமானார். கு.ராஜவேலு சேலம் மாவட்டம் போடிநாயக்கன்பட்டியில் கடந்த 1920}ஆம் ஆண்டு ஜன.29}ஆம் தேதி பிறந்தவர். இவர் தனது 14}ஆவது வயதிலேயே சிறுகதைகளை எழுதத் தொடங்கினார். மாணவராக பச்சையப்பர் கல்லூரியில் தன் கல்வி வாழ்வைத் தொடங்கிய போதே தமிழ் முதுகலை ( ஆனர்ஸ் ) பயிலும்போது "காதல் தூங்குகிறது' என்ற புதினம் எழுதிக் கலைமகள் இதழின் ஆயிரம் ரூபாய் பரிசு பெற்றார்.
குடந்தை அரசுக் கல்லூரியிலும் , சென்னை கலைக் கல்லூரியிலும் பேராசிரியராகப் பணியாற்றியவர். தமிழக அரசின் செய்தித்துறை, மொழிபெயர்ப்புத்துறை ஆகியவற்றில் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். ஓய்வு பெற்ற பிறகும் இரு ஆண்டுகள் தமிழக அரசின் தமிழ்ப் பண்பாட்டு இயக்ககத்தில் இயக்குநராகப் பணியமர்த்தப்பட்டார்.
முன்னாள் தமிழக முதல்வர் காமராஜருக்கு நெருங்கிய நண்பராகத் திகழ்ந்தவர். காந்தி, நேரு, நேதாஜி போன்ற தேசியத் தலைவர்களைக் கண்டு உரையாடியவர். 11 ஆண்டுகள் முழு நேர அரசியல் வாழ்க்கையும், ஈராண்டுகள் சிறை வாழ்வையும் கண்டவர். அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக நீண்ட காலம் பணியாற்றினார் .
கொடை வளம் , சத்தியச் சுடர்கள் , வைகறை வான் மீன்கள் , வள்ளல் பாரி , வான வீதி , காந்த முள் , மகிழம்பூ , தேயாத நிறை நிலா ,இடிந்த கோபுரம் போன்ற பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். இவரது நூற்றாண்டு விழாவைச் சிறப்பிக்கும் வகையில் இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டுச் சிறப்புச் செய்துள்ளது.
Tags :