பனை மேம்பாட்டு திட்டம்: ஸ்டாலின் துவக்கி வைத்தார்

by Editor / 17-09-2021 06:53:12pm
பனை மேம்பாட்டு திட்டம்: ஸ்டாலின் துவக்கி வைத்தார்

பனை மேம்பாட்டுத் திட்டத்தை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இன்று (17 ந் தேதி) தலைமைச் செயலகத்தில், சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு பனை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் பனை விதைகளை வேளாண் துறைக்கு வழங்குவதை குறிக்கும் விதமாக பனை விதைகளை வழங்கினார்.

தமிழ்நாட்டில் பனைமரங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு தற்போதுள்ள பனைமரங்களைப் பாதுகாப்பதுடன், கூடுதலாக பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, நடப்பாண்டு 30 மாவட்டங்களில், 76 லட்சம் பனை விதைகளையும், ஒரு லட்சம் பனங்கன்றுகளையும் முழு மானியத்தில் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளும் என்று 2021- 22 ம் ஆண்டு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் தனி நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இந்த பனை மேம்பாட்டு இயக்கத்திற்கு 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

ரூ.3 கோடி ஒதுக்கீடு

சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு ஒரு லட்சம் பனை விதைகளை வழங்குவதாக வேளாண் நிதிநிலை அறிக்கையின்போது உறுதி அளித்தார். அதன்படி, சட்டப்பேரவை தலைவரால் வழங்கப்பட்ட ஒரு லட்சம் பனை விதைகள், ஏரிக்கரை, சாலையோரம் மற்றும் விவசாய நிலங்களில் நடவு செய்யும் பனை மேம்பாட்டு திட்டம் இன்று முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.இந்நிகழ்வின்போது, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலாளர் சி. சமயமூர்த்தி, வேளாண்மைத் துறை இயக்குநர் ஏ.அண்ணாதுரை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் ஆர். பிருந்தாதேவி, வேளாண்மைத் துறை கூடுதல் இயக்குநர் ஸ்வரன் குமார் ஜடாவத் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

சபாநாயகர் ஏற்கனவே அறிவித்தபடி அவரது சொந்த செலவில் ஒரு லட்சம் பனை விதைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று அவரது சொந்த ஊரான பணகுடி அருகே உள்ள லெப்பைக் குடியிருப்பில் நடைபெற்றது.

அப்போது, தமிழக வேளாண்மைத் துறைக்கு ஒரு லட்சம் பனை விதைகள் லாரிகள் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனை சபாநாயகர் அப்பாவு கொடியசைத்து தொடங்கி வைத்தார். அவை சென்னை பூந்தமல்லி செம்மொழி பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பின்னர் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயிகள் மீதும், பசுமை காடுகள் வளர்ப்பு உள்ளிட்ட இயற்கை முறைகள் மீது அதிக ஆர்வமாக உள்ளார். தமிழர்களின் வாழ்வோடும், மொழியோடும், வளத்தோடும் ஒன்றுபட்டு, மழை ஈர்ப்பு மையம், நீர் நிலைகளின் காவலன் என்று அழைக்கப்படும் பனை மரங்கள் அழிந்து வருகின்றது.

அதனை தடுக்கவும், சிறப்புமிக்க பனை மரங்களை அழிவில் இருந்து காப்பாற்றவும் ஏரிக்கரைகளிலும், சாலை ஓரங்களிலும் அதனை வளர்ப்பதற்காக பனை மர பெருக்க திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆண்டுதோறும் 1 லட்சம் பனை விதைகளை அரசுக்கு அளிக்கிறேன். தற்போது 1 லட்சம் பனைமரங்களை கொடுத்துள்ளேன். எவ்வளவு பனைவிதைகள் தேவை என்றாலும் இங்கிருந்து அனுப்பி வைக்கப்படும். எந்த மாவட்டத்திற்கு கேட்டாலும் பனை விதைகள் தட்டுப்பாடு இல்லாமல் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags :

Share via