சிறிய அதிகாரங்களை இழக்க விரும்பவில்லை: நிர்மலாவுக்கு நிதியமைச்சர்தியாகராஜன் கடிதம்

by Editor / 18-09-2021 12:26:48pm
சிறிய அதிகாரங்களை இழக்க விரும்பவில்லை: நிர்மலாவுக்கு நிதியமைச்சர்தியாகராஜன் கடிதம்

ஜி.எஸ்.டி., வரம்புக்குள் பெட்ரோல், டீசல் கொண்டு வந்தால் மாநிலங்களுக்கு சொந்த வரி வருவாய் என்பதே இல்லாமல் போய்விடும் என தமிழக நிதியமைச்சர் தியாகராஜன், நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதி உள்ளார்.மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, தமிழக நிதியமைச்சர் தியாகராஜன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் ஒராண்டுக்கு பின் நேரடியாக நடப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனினும், தவிர்க்க முடியாத பணிகள் காரணமாக இந்த கூட்டத்தில் என்னால் கலந்துக் கொள்ள முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது. இந்த கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் சில கோரிக்கைகளை சமர்ப்பிக்கிறேன்.ஜி.எஸ்.டி., செயல்பாடு மற்றும் தொழில்நுட்பம் கடினமாக உள்ளது. ஆங்கிலத்திலும் உள்ளது. இதை புரிந்து கொள்ள முடியாமல் சிறு, குறு வணிகர்கள், வரி ஆலோசகர்களை நாடுவதால் அவர்களுக்கு கூடுதல் செலவாகிறது.அதனால் ஜி.எஸ்.டி., நடைமுறையை இணையத்தில் முழுமையாக தமிழ்படுத்த வேண்டும். ஜி.எஸ்.டி., அமலால் மாநிலங்களின் சிறிய அளவிலான வரி உரிமைகள் கூட பறிபோய்விட்டன.மாநிலங்களின் சொந்த வருவாயை நிர்வகிப்பதில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மாநில வரி விதிப்பு மட்டுமே தற்போது உள்ளது.இதையும் ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டு வந்தால் மாநிலங்களுக்கு சொந்த வரி வருவாய் என்பதே இல்லாமல் போய்விடும். அதனால் இதுபோன்ற சிறிய அதிகாரங்களை நாங்கள் இழக்க விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Tags :

Share via