வார்டு வரையறை குளறுபடிகளுக்கு  அ.தி.மு.க., தான் பொறுப்பு  அமைச்சர் துரைமுருகன்

by Editor / 21-09-2021 03:33:25pm
வார்டு வரையறை குளறுபடிகளுக்கு  அ.தி.மு.க., தான் பொறுப்பு  அமைச்சர் துரைமுருகன்


 "வார்டு வரையறை குளறுபடிகளுக்கு அ.தி.மு.க., தான் பொறுப்பு நாங்கள் இல்லை," எனக் கூறி உள்ளாட்சித்தேர்தலில் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளுக்கான பட்டியலை வெளியிட்டார் 
தமிழக நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன்.வேலூர் மாவட்டத்தில் உள்ள தி.மு.க., மத்திய மாவட்ட அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர், திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் குறித்த பட்டியலை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: தோழமை கட்சிகளை அரவணைத்து இடம் கொடுக்க வேண்டும் என்பது தி.மு.க., தலைவரின் ஆணை. அதற்காக மாவட்ட செயலாளர், நிர்வாகிகள், தோழமை கட்சிகளுடன் கலந்து பேசியுள்ளனர்.அதன்படி, வேலூர் மாவட்ட ஊரக உள்ளாட்சித்தேர்தலில் ஒன்றிய கவுன்சிலரில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு இடம், மாவட்ட ஊராட்சி குழுவுக்கு காங்கிரசுக்கு ஒரு இடம் ஒன்றிய குழுவில் காங்கிரசுக்கு மூன்று, மார்க்சிஸ்ட் கம்யூ.,க்கு ஒரு இடம், இந்திய கம்யூ.,க்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

கொரோனா காரணமாக முக்கிய தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட முடியாது, கூட்டங்களை எல்லாம் நடத்த முடியாது.அ.தி.மு.க.,வினர் தேர்தலில் வார்டு வரையறையில் குளறுபடிகள் உள்ளதாக வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆனால், இதையெல்லாம் மாற்றியதே அ.தி.மு.க., தான். நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் போது பிரகாசமான வெற்றி பெற்றோம். இப்போதும் அதே போல் வெற்றி பெறுவோம்.

கூட்டணி கட்சிகளுக்கு கேட்ட இடங்களை ஒதுக்கியுள்ளோம். கட்சிகள் மன மகிழ்ச்சியுடன் சென்றுள்ளனர். நீட் தேர்வு விலக்கு சட்ட ரீதியாக வாய்ப்பில்லை என எதிர்க்கட்சிகள் கூறினாலும் எங்களின் தீர்மானம் வெற்றி பெறும் என்று நாங்கள் நினைக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

 

Tags :

Share via