பழனியில் பயங்கரம்.. அரசு பேருந்து - லாரி மோதல்.. 3 பேர் பலி

by Editor / 24-09-2021 10:53:01am
பழனியில் பயங்கரம்.. அரசு பேருந்து - லாரி மோதல்.. 3 பேர் பலி

பழனி அருகே, கோவை நோக்கி சென்ற அரசுப் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த 20 பேர் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து கோவைக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து பழனியை அடுத்த தாழையூத்து அருகே சென்றபோது எதிரே வந்த லாரி பயங்கரமாக மோதியது. இதில், அரசு பேருந்து பலத்த சேதமடைந்தது.

தகவல் அறிந்த சாமிநாதபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பேருந்தில் சிக்கியிருந்த 20 பேரை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பேருந்தில் பயணம் செய்த 3 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் 2 பேரின் அடையாளம் மட்டும் தெரிய வந்துள்ளது. இறந்தவர்களில் ஒருவர் பொள்ளாச்சியை சேர்ந்த மணிகண்ட பிரபு, மற்றொருவர் அருப்புக்கோட்டை காரியாபட்டி அருகே உள்ள புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த ருக்கிரபாண்டி என உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 3-வது நபர் யார் என்பது தெரியவில்லை.

லாரி ஓட்டுநர் ராஜேஷ் தூக்க கலக்கத்தில் கண்ணை மூடியதால் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. இவ்விபத்தில் ராஜேஷ் படுகாயமடைந்த நிலையில் பழனி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

 

Tags :

Share via