3வது அலைக்கு வழிவகுத்து விடாதீர்கள்: முதல்வருக்கு ஓ. பன்னீர்செல்வம் வேண்டுகோள்

கொரோனா கட்டுப்பாடுகளை அனைவரும் பின்பற்றுவதை கண்காணிக்கவும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகளை வழங்கி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவதற்கான வழிவகையினை மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சி நிறுவனத்தால் அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவின் அறிக்கையில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கொரோனா நோய்த் தொற்றின் மூன்றாவது அலை வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளது என்றும், நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டுமென்றும், தடுப்பூசி போடுவது தொடர்ந்து ஊக்கப்படுத்தப்பட வேண்டுமென்றும் தெரிவித்துள்ள நிலையில், அனுமதிக்கப்பட்ட அனைத்துக் கடைகளும் குளிர் சாதன வசதி இல்லாது செயல்படுவதோடு, சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது என்ற கட்டுப்பாடு தமிழ்நாடு அரசால் விதிக்கப்பட்டது.
இருப்பினும், தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாலும், பண்டிகை காலம் என்பதால், அனைத்து சில்லறை விற்பனை கடைகள் முன்பும், கொரோனா பாதிப்பிற்கு முன் இருந்த கூட்டத்தை நெருங்கும் அளவுக்கு மக்கள் கூட்டம் அதிகரித்து இருக்கிறது என்றும், சிறப்பு அங்காடிகளில் கொரோனா தொற்றுக்கு முன் இருந்ததைவிட கூட்டம் அதிகரித்துள்ளதாகவும், இந்த ஆண்டு மே மாதம் வெறிச்சோடி கிடந்த தெருக்கள் தற்போது அலைகடல் போல் காட்சியளிப்பதாகவும், வார இறுதி நாட்களில் தங்குமிடங்கள் முழுவதும் நிரம்பி விடுவதாகவும் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாக தலையிட்டு, அரசு விதித்திருக்கும் கொரோனா கட்டுப்பாடுகளை கண்டிப்பாக அனைவரும் பின்பற்றுகிறார்களா என்பதை உறுதி செய்யவும், குறிப்பிட்ட சாலைகளில் மக்கள் கூட்டம் அலைமோதாமல் இருப்பதை கண்காணிக்கவும், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவை குறித்து பொதுமக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உரிய அறிவுரைகளை அதிகாரிகளுக்கு வழங்கி, ஏற்ற இறக்கமாக உள்ள கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இறங்குமுகமாக செல்வதற்கான வழிவகையினை காண வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.
Tags :