இந்திய நீதித்துறையில் பெண்களுக்கு 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு தேவை: தலைமை நீதிபதி

by Editor / 26-09-2021 03:26:20pm
இந்திய நீதித்துறையில் பெண்களுக்கு 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு தேவை: தலைமை நீதிபதி

இந்திய நீதித்துறையிலும் நாடு முழுவதும் உள்ள சட்ட கல்லூரிகளிலும் பெண்களுக்கு 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என இந்திய தலைமை நீதிபதி என். வி. ரமணா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், ரமணா தலைமையிலான கொலிஜியம் அமைப்பு, ஒன்பது புதிய நீதிபதிகளை உச்ச நீதிமன்றத்திற்கு பரிந்துரைத்தது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கிய நிலையில், ஒரே நேரத்தில் ஒன்பது நீதிபதிகளும் பதவியேற்று கொண்டனர். புதிய நீதிபதிகளை வரவேற்கும் வகையிலும் ரமணாவுக்கு பாராட்டு தெரிவிக்கும் நோக்கிலும் உச்ச நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் பாராட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தனர்.இதில், கலந்து கொண்டு பேசிய ரமணா, "50 சதவிகித இட ஒதுக்கீடு உங்களின் (பெண்கள்) உரிமை. நீதிமன்றங்களிலும் சட்ட கல்லூரிகளிலும் இட ஒதுக்கீட்டை கோருவதற்கு உங்களும் முழு உரிமை உண்டு. நீதித்துறையில் பெண்களுக்கு 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு தேவை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பெண்கள் ஒடுக்கப்படுகின்றனர். கீழமை நீதிமன்றங்களில் 30 சதவிகிதத்திற்கு குறைவாகவே பெண் நீதிபதிகள் உள்ளனர்.

உயர் நீதிமன்றங்களில் 11.5 சதவிகிதம் மட்டுமே பெண் நீதிபதிகள் உள்ளனர். உச்ச நீதிமன்றங்களில் 11 முதல் 12 சதவிகிதம் மட்டுமே உள்ளனர். நாட்டில் உள்ள 17 லட்சம் வழக்கறிஞர்களில் 15 சதவிகிதம் மட்டுமே பெண்கள். இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தில் ஏன் ஒரு பெண் பிரதிநிதி கூட இல்லை என கேள்வி எழுப்பியுள்ளேன். இந்த பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு தேவை" என்றார்.

 

Tags :

Share via