பெற்ற மகளையே பலாத்காரம் செய்த தந்தைக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை
: வேதாரண்யம் அருகே பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து நாகை மாவட்ட போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா வாய்மேடு அருகே மருதூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். 40 வயதான இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ம் தேதி அன்று தனியாக இருந்த தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து அவரது மகள் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொத்தனார் பாஸ்கரை கைது செய்தனர்.
இந்த வழக்கு நாகை மாவட்ட போக்சோ சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தமிழரசி தீர்ப்பு வழங்கினார்.
அதில் பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொத்தனாருக்கு, சாகும் வரை ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், பாலியல் உணர்வை தூண்டியதற்காக 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும், கொலை மிரட்டல் விடுத்ததாக 2 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட கொத்தனார் போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறையில் அடைப்பதற்காக கொண்டு செல்லப்பட்டார்.
Tags :