போலீஸ்காரர் மனைவியை கொலை செய்த மருமகன் கைது

by Editor / 01-10-2021 07:16:34pm
போலீஸ்காரர் மனைவியை கொலை செய்த மருமகன் கைது

 

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பிள்ளையார் பெரியவன்தட்டு பகுதியை சேர்ந்தவர் செல்வமுருகன். இவர் திருச்செந்தூரில் தனிப்பிரிவு போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி அருணா (வயது 40). இந்த தம்பதிக்கு கமலேஷ் (20), அகிலேஷ் (10) என்று 2 மகன்கள் உள்ளனர். இதில் கமலேஷ் சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். அகிலேஷ் உடன்குடி பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். 


இந்த நிலையில் குடும்பத்தகராறு காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ந்தேதி இரவு செல்வமுருகன் அங்குள்ள காட்டுப்பகுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அதன்பிறகு அருணா தனது மகன்களுடன் பிள்ளையார் பெரியவன்தட்டு பகுதியில் வசித்து வந்தார்.


இந்த நிலையில்  செல்வமுருகனின் அக்காள் ராசம்மாளின் மகன் முத்துக்குமார் (30), அருணாவின் வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபட்டார். திடீரென்று அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அருணாவை சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். கத்திக்குத்தில் பலத்த காயம் அடைந்த அருணா சம்பவ இடத்திேலயே பரிதாபமாக இறந்தார்.


இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில், திருச்செந்தூர் உதவி ேபாலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் ஆலோசனைப்படி, கொலையாளியை பிடிக்க குலசேகரன்பட்டினம் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார், முத்துக்குமாரை பிடித்து விசாரணை நடத்தினர். 
அப்போது அவர் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
என்னுடைய தாய்மாமா செல்வமுருகன் கடந்த ஆண்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டிய அத்தை அருணா மீது எனக்கு ஆத்திரம் இருந்தது. இருப்பினும் அதை மறந்து எனது மாமாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை இரு வீட்டு குடும்பத்தினரையும் அழைத்து அனுசரிக்க வேண்டும் என்று விரும்பினேன். இதை அத்தையிடம் தெரிவித்தேன்.


ஆனால் அவர் அதை அலட்சியம் செய்துவிட்டு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பே ராமேசுவரத்துக்கு தன்வழி உறவினர்களை மட்டும் அழைத்துச்சென்று திதி கொடுத்துவிட்டு வந்துவிட்டார். இதை அறிந்ததும் எனக்கு அத்தை மீது கடும் ஆத்திரம் ஏற்பட்டது. இருப்பினும் மாமா இறந்த நாளன்று அவர் வழி உறவினர்களையும் அழைத்து நினைவு நாளை அனுசரிப்போம் என்று அத்தையிடம் தெரிவித்தேன். ஆனால் அதற்கு அவர் சரியான பதிலளிக்காமல் இருந்தார். இதனால் அத்தை மீது தாங்க முடியாத கோபம் ஏற்பட்டது. அவரை தீர்த்துக்கட்ட நினைத்தேன்.


நேற்று முன்தினம் மதியம் அத்தை வீட்டுக்கு சென்றேன். அங்கு அத்தை அருணா தனது தாய் வேலம்மாள், மகன் அகிலேஷ் ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தார். அவரிடம் நான், இன்று மாமாவின் நினைவு நாள் தானே. அதை ஏன் நீங்கள் அனுசரிக்கவில்லை. மாமா வழி உறவினர்களே தேவையில்லை என நினைத்து விட்டீர்களா? அவர்களையும் அழைத்து முதலாம் ஆண்டு நினைவு நாளை அனுசரித்து இருக்கலாமே? என்று ஆத்திரத்துடன் கேட்டேன். 


அதற்கு அவர் அலட்சியமாக பதிலளிக்கவே, கதவை உட்புறமாக சாத்திக்கொண்டு வேலம்மாள், அகிலேஷ் ஆகியோரை மிரட்டி, நான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அத்தை அருணாவை சரமாரியாக குத்தினேன். இதில் அவர் மயங்கி சரியவே, வேலம்மாளும், அகிலேசும் சத்தம் போட்டனர். உடனே நான் அங்கிருந்து தப்பி ஓடி விட்டேன். இந்த நிலையில் அத்தை அருணா இறந்து உள்ளார்.இவ்வாறு முத்துக்குமார் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். 


இதையடுத்து அருணாவின் தாய் வேலம்மாள் கொடுத்த புகாரின் பேரில், குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர்.

 

Tags :

Share via