புலியை பிடிக்கும் பணிக்கு கும்கி யானை: தலைமை வன பாதுகாவலர்

by Editor / 03-10-2021 05:27:26pm
புலியை பிடிக்கும் பணிக்கு கும்கி யானை: தலைமை வன பாதுகாவலர்

புலி எக்காரணம் கொண்டும் சுட்டுக் கொல்லப்படாது என தமிழ்நாடு முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் தெரிவித்துள்ளார்.புலியை பிடிக்கும் வரை மக்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை வெளிவட்டத்தில் மசினகுடி உள்ளிட்ட பகுதிகளில் டி 23 என்று அழைக்கப்படும் புலி ஒன்று சுற்றித் திரிகிறது.தேவர்சோலை அருகே தனியார் எஸ்டேட் பகுதியை சேர்ந்த சந்திரன் (வயது 51) என்பவரை கடந்த 24 ந்தேதி தாக்கி கொன்ற புலியை, அப்பகுதியில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கடந்த 1 ந்தேதி, மசினகுடி குறும்பர் பாடியை சேர்ந்த மங்கள பசுவன் (வயது 85) என்பரை புலி தாக்கி கொன்றது.அதுமட்டுமில்லாமல் ஏராளமான ஆடுகள், மாடுகள், நாய்கள் என வளர்ப்பு பிராணிகளையும் அந்த புலி கொன்றது.இதனிடையே, அந்த புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க 5 இடங்களில் குண்டு வைத்த முயற்சி பலனளிக்கவில்லை. தொடர்ந்து ஒரு வாரத்திற்கும் மேலாக அந்த புலி வனத்துறையினரிடம் சிக்காமல் காட்டுப்பகுதிக்குள் சுற்றித்திரிந்து வருகிறது.

மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அந்த புலியை சுட்டு பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.மக்கள் போராட்டத்தை தொடர்ந்து, புலியை சுட்டுபிடிப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர். அதன்படி வனத்துறையினருடன், தமிழக அதிரடிப்படை மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசாரும் என 70 பேர் கொண்ட குழு வனப்பகுதியில் முகாமிட்டு தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

புலியை சுட்டுப்பிடிக்க உத்தரவிட்டதற்கு கமல்ஹாசன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அந்த புலியை பிடிக்க வேண்டுமென அவர்கள் கூறியிருந்தனர்இந்த நிலையில் மசினகுடியில் வனத்துறை அதிகாரிகள் மற்றும் கால்நடை டாக்டர்களுடன் பணிகள் குறித்து தமிழக முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.ஆலோசனைக்கு பின் அவர் கூறுகையில், 'எக்காரணத்தைக் கொண்டும், புலி சுட்டுக் கொல்லப் படமாட்டாது. அதனை உயிருடன் பிடிப்பதற்கான முயற்சிகள் மட்டுமே தற்போது வரை நடைபெற்று வருகிறது. அதற்கான பணிகளில் கால்நடை டாக்டர்கள், வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர் என கூறினார்.இந்த நிலையில் 9-வது நாளாக புலியை தேடும் பணி நடைபெற்று வருகிறது. தேடுதல் வேட்டையில் மோப்ப நாய்கள், டிரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. புலியை பிடிக்க சிறப்பு பயிற்சி பெற்ற 8 பேர் வருகை தந்துள்ளனர். புலியை பிடிக்கும் வரை மக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் என்று வனத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புலியை பிடிக்கும் பணியில் வனத்துறைக்கு உதவுவதற்காக கும்கி யானை சீனிவாசன், சிப்பிபாறை நாய் இப்பகுதிக்கு வந்துள்ளது.

 

Tags :

Share via