பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் குப்பைகளை அகழ்ந்தெடுக்கும் யந்திரம்

by Editor / 12-10-2021 04:16:45pm
பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் குப்பைகளை அகழ்ந்தெடுக்கும் யந்திரம்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு சராசரியாக 5100 டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. இந்தத் திடக்கழிவுகள் மக்கும், மக்காத கழிவுகளாக பிரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யும் வகையில் பதனிடும் மையங்களுக்கு அனுப்பப்படுகிறது. மீதமுள்ள கழிவுகள் பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் உள்ள குப்பைக் கொட்டும் வளாகங்களில் கொட்டப்பட்டு வருகிறது.

பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகம் 225 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இதில் நீண்ட நாட்களாக கொட்டிக் கிடக்கும் குப்பை 34.02 லட்சம் கன மீட்டர் அளவில் உள்ளது. இந்தப் பயோ மைனிங் முறையில் அகழ்ந்தெடுக்கும் பணியானது ரூ.350.65 கோடி மதிப்பீட்டில் 6 சிப்பங்களாக மூன்று ஆண்டுகளில் நிறைவு செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது 5 வது சிப்பப் பணி முடிந்து இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள சிப்பப் பணிகள் நடைபெற்று வருகிறது.

கொடுங்கையூர் குப்பைக் கொட்டும் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள கட்டிட மற்றும் இடிபாடு கழிவுகளை கல் மற்றும் மணலாக பிரித்தெடுத்து மறுசுழற்சி செய்யும் இயந்திரத்தின் செயல்பாட்டினை தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.

அமைச்சர்கள் ராயபுரம் மண்டலம், வார்டு-54ல் அமைக்கப்பட்டுள்ள தோட்டக்கழிவுகள் மற்றும் தேங்காய் குடுவைகளை மறுசுழற்சி செய்யும் மையத்தை பார்வையிட்டனர். தொடர்ந்து, வால்டாக்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சி கட்டணமில்லா கழிப்பிடத்திலும் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். பொதுக்கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்கவும், சேதமடைந்த கழிப்பறைகளை உடனடியாக சீரமைக்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

இந்நிகழ்ச்சியில், தென்சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.அரவிந்த் ரமேஷ், ஆர்.டி.சேகர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா, அரசு முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, துணை ஆணையாளர்கள் எஸ்.மனிஷ், (சுகாதாரம்), எம்.எஸ்.பிரசாந்த், (பணிகள்), சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன், (தெற்கு வட்டாரம்) மா.சிவகுரு பிரபாகரன், (வடக்கு வட்டாரம்), தலைமைப் பொறியாளர் (திடக்கழிவு) என்.மகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via