பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார் (செப்டம்பர் 16}

by Editor / 15-10-2021 04:42:35pm
பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார் (செப்டம்பர் 16}

பண்டிதமணி என அழைக்கப்பட்ட மு. கதிரேசச் செட்டியார் (செப்டம்பர் 16, 1881 - அக்டோபர் 24, 1953) ஏழு மாதங்கள் கூட பள்ளியில் படிக்காமல் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய பெருமைக்கு உரியவர். வடமொழி நூல்கள் பலவற்றை மொழி பெயர்த்தவர். பல தமிழறிஞர்களுக்குப் பாடம் சொன்னவர். சிறந்த சொற்பொழிவாளர். இரு பொருள் படப் பேசுவதில் வல்லவர். தமிழாய்வு செய்து தமிழ்த்தொண்டாற்றியவர்.


கதிரேச செட்டியார் மகிபாலன் பட்டியில் முத்துகருப்பன், சிவப்பி ஆச்சி அவர்களுக்கு 16-09-1881 அன்று பிறந்தார். சிறு வயதிலேயே இளம்பிள்ளை வாத நோயால் துன்புற்றார். தந்தை மலேசியா இலங்கை முதலிய நாடுகளுக்கு வாணிகம் செய்யச் சென்றதால் இவர் தனது ஏழாம் வயதில் திண்ணைப் பள்ளிக் கூடத்தில் சேர்ந்தார். அப்பொழுதே ஆத்திசூடி, உலக நீதி அகியவற்றின் சொல்லழகு இவரைக் கவர்ந்ததால் படிப்படியாக திருத்தொண்டர் புராணம், கம்பராமாயணம், சில பிள்ளைத்தமிழ் நூல்கள் ஆகியவற்றைத் தாமே ஓதி உணர்ந்தார்.அக்காலத்தில் இருந்த தம் குல வழக்கப்படி தனது 11 ஆம் வயதில் பொருளீட்டுவதற்காக இலங்கை சென்றார். இலங்கையின் எழிலில் அவர் மனம் பறி கொடுத்த நேரத்தில் அவருக்கு மீண்டும் வாத நோயின் கொடுமை தலைகாட்டியது. அப்பொழுது தனது தந்தையின் திடீர் மரணம் அவருக்கு மேலும் அதிர்ச்சி அளித்தது. உடலும் உள்ளமும் மிகவும் நலிவுற்ற நிலையில் தனது 14 ஆம் வயதில் அவர் தாய்நாடு திரும்பினார். நோய் தீவிரமானதால் ஊன்று கோலின்றி நடக்க முடியாத நிலைக்கு ஆளானார்.தமிழின் மீதுள்ள ஆர்வம் காரணமாக, தனது நோயின் காரணமாக நடமாட முடியாமையால் கிடைத்த ஓய்வு நேரத்தில் தமிழ் நூல்களை ஊன்றிக் கற்றார். சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, பெரிய புராணம், திருவாசகம், புறநானூறு, திருக்குறள், கம்பராமாயணம் ஆகியவற்றை இவர் ஆசிரியர் இல்லாமலே ஆழ்ந்து கற்றார். தொல்காப்பியத்தையும் அதற்கான சேனாவரையரின் உரையையும் தன் ஆருயிர் நண்பரான அரசஞ்சண்முகனாரிடம் பாடம் கேட்டார்.


அரசஞ்சண்முகனாரின் மூலம் மதுரை 'வித்யா பானு' அச்சகத்தின் உரிமையாளரான மு. ரா. கந்தசாமிக் கவிராயரின் நட்பு கதிரேசனாருக்குக் கிடைத்தது. இதன் பயனாய் இவர் வித்யாபாநு இதழுக்குப் பல அரிய தமிழ் கட்டுரைகள் எழுதினார்.கதிரேசனாரின் நண்பரான ரா. ராகவையங்கார் இவரை பாண்டித்துரைத் தேவருக்கு அறிமுகம் செய்தார். மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் அமைக்க வேண்டும் என பாண்டித்துரைத் தேவர் முயன்று கொண்டிருந்த காலம் அது. கதிரேசனாரின் புலமைக்கு மரியாதை செலுத்த விரும்பிய தேவர் தமிழ்ச் சங்கத்தைத் தொடங்கி வைத்த புலவர்களில் ஒருவராக கதிரேசனாரையும் சேர்த்தார்.

தமிழ் மொழியில் பெரும் புலமை பெற்றிருந்த கதிரேசனார் வட மொழியிலும் புலமை பெற்றால் தன் புலமை முழுமை அடையும் என எண்ணி தருவை. நாராயண சாஸ்திரியாரிடம் ஐந்து ஆண்டுகள் வடமொழியைக் கற்றார்.
கதிரேசனாரின் துவக்க காலத் தமிழ்த் தொண்டில் குறிப்பிடத்தக்கது மேலைச் சிவபுரியில் இவர் அமைத்து நடத்திய 'சன்மார்க்க சபை' ஆகும். பொருளியலில் காட்டிய ஆர்வத்தை நகரத்தார் கல்வியில் காட்டாதிருந்த அக்காலத்தில் சன்மார்க்க சபையின் மூலம் அவ்வினத்தாரிடம் தமிழார்வத்தைத் தூண்டி வளர்த்த பெருமை கதிரேசனாரையே சாரும். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப்பணி செய்தார்.

 

Tags :

Share via