ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க நடவடிக்கை அமைச்சர் எஸ்.ரகுபதி தகவல்

by Editor / 19-10-2021 03:36:26pm
 ஆயுள் தண்டனை கைதிகளை  விடுவிக்க நடவடிக்கை  அமைச்சர் எஸ்.ரகுபதி தகவல்

கோவை மத்திய சிறைச்சாலையில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,


சமூகத்தில் உள்ளவர்களை சட்டமுறைக்கு எதிரானவர்களிடம் இருந்து பாதுகாக்கும் பொருட்டும், சட்டமுறைக்கு எதிரான செயல்களினால் சிறை வாசத் தண்டனைக்குள்ளானவர்களை மனிதநேயத்துடன் நல்வழிப்படுத்தும் பொருட்டும், சிறைவாசத்துக்குப்பின் விடுதலையின் பொழுது முழுமையான, சமுதாயத்துக்கு உகந்தவராக, அவர் விடுதலை பெறவேண்டும் என்ற நோக்கத்திறகாக சிறைச்சாலைகள் உருவாக்கப்பட்டதாகும்.


கோவை மத்திய சிறைச்சாலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டதுடன், சிறைச்சாலையில் உள்ள சிறைக்கைதிகளின் வேண்டுகோளை கேட்டு அறியப்பட்டது.சிறைச்சாலைக்கு வரும் குற்றவாளிகள் திருந்துவதற்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. சிறையில் அவர்களுக்கு கைத்தறி, நெசவு உள்ளிட்ட பல்வேறு சுயதொழில்கள் கற்றுத்தரப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள காவல் துறையினர், சிறைத்துறையினர், அனைவருக்கும் தேவையான சீருடைகளை இங்குள்ள சிறைக் கைதிகளை தயாரிக்கிறார்கள்.


சிறையில் இருக்கும் காலத்தில் புதியதாக தொழில் கற்றுக்கொள்வதற்கும், நேரத்தை பயனுள்ளதாக செலவளிக்கும் வகையிலும், அவர்கள் சிறையிலிருந்து வெளியில் செல்லும்போது சுயமாக தொழில் செய்வதற்கும் உறுதுணையாக அமைந்திருக்கிறது.
10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்குமாறு சிறைகைதிகள் கோரிக்கை வைத்துள்ளார்கள். ஏற்கனவே, இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


சிறைச்சாலைகளை நவீனமயமாக்குதல், திறந்தவெளி சிறைச்சாலைகள் அமைத்தல் ஆகியவை அரசின் பரீசிலனையில் உள்ளது. அவ்வாறு சிறைச்சாலைகள் நவீனமயமாக்கப்படும்போது, சிறைக் கைதிகள் திருந்திவாழ்வதற்கு உகந்த சூழ்நிலைகள் உருவாக்கப்படும். இதுதொடர்பாக அரசு கொள்கை முடிவடுக்கும். இவ்வாறு அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, அமைச்சர் எஸ்.ரகுபதி மத்திய சிறைச்சாலை முகப்பில் உள்ள வ.உ.சிதம்பரனார் இழுத்த செக்குக்கு அருகில் அன்னாரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

 

Tags :

Share via