அனைத்து மாநில போலீஸ் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை
இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அனைத்து மாநில போலீஸ் உயர் அதிகாரிகளுடன் நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்து ஆலோசனை நடத்தினார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா, அனைத்து மாநில போலீஸ் உயர் அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், மாநிலங்களின் காவல்துறை தலைவர்கள், யூனியன் பிரதேசங்களின் உயர் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர். நாட்டின் பாதுகாப்பு நிலவரம், சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு பணிகளில் போலீஸாரிடையே ஒருங்கிணைப்பு ஆகியவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
மேலும், அண்மை காலமாக காஷ்மீரில் அப்பாவி மக்களை பயங்கரவாதிகள் குறிவைத்து தாக்கி வருகின்றனர். வெளிமாநில மற்றும் புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்களையும் சுட்டுக் கொன்று வருகின்றனர். பீகாரைச் சேர்ந்த 2 தொழிலாளர்களை இரண்டு நாட்களுக்கு முன் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். காஷ்மீரில் பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள், டெல்லியின் எல்லைப் பகுதிகள் மற்றும் உ.பி.யில் விவசாயிகளின் போராட்டம் ஆகியவை குறித்தும் போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. போலீஸார் விழிப்புடன் செயல்பட்டு சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும். பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்க வேண்டும் என்றும் அமித் ஷா அறிவுறுத்தியதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Tags :