இனி தாம்பரம் வேற லெவல் ..! அவசர சட்டம் தமிழக அரசு பிறப்பித்தது
சென்னையை அடுத்த தாம்பரம் பகுதியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.. அவசர சட்டத்தின்படி தாம்பரம் மாநகராட்சி உடனடியாக செயல்பாட்டுக்கு வருவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலூர், ஈரோடு, திருப்பூர், தஞ்சாவூர், நாகர்கோவில், ஓசூர், திண்டுக்கல் மற்றும் ஆவடி என்று தமிழ்நாட்டில் மொத்தம் 15 மாநகராட்சிகள் இருக்கின்றன.. இதில் சென்னை மட்டும் பெருநகர மாநகராட்சி என்கிற உயரிய அந்தஸ்தில் உள்ளது.
இப்படிப்பட்ட சூழலில்தான், தமிழக சட்டமன்றத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி நடந்தது.. அன்றைய தினம், முக்கிய அறிவிப்பாக தாம்பரம் உள்ளிட்ட 6 புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு அறிவித்து இருந்தார்.
அதாவது "தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பேரூராட்சிகள், ஊராட்சிகளை ஒன்றிணைத்து தாம்பரம் மாநகராட்சியாக அறிவிக்கப்படும்"என்று அதிரடியாக அன்றைய தினமே அவையில் அறிவித்திருந்தார். தமிழக சட்டசபையில் தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
தாம்பரம் மாநகராட்சி, காவல் ஆணையரகம் அமையவுள்ளதால் அவற்றுக்கு புதிய அலுவலகம் கட்டுவதற்காக தாம்பரம் சானடோரியத்தில் 9.5 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது... இதை தொடர்ந்து அதற்கான அனைத்து பணிகளும் துரிதமாக நடந்து வருகின்றன. இதன்படி தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்களின் கீழ் செயல்படும் காவல் நிலையங்கள் மற்றும் அவற்றுக்கான எல்லைகள் பிரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட சிறப்பு அதிகாரிகள் அந்தந்த காவல் ஆணையரகங்களில் இந்த இறுதிக்குள் பதவியேற்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார்.
இதனிடையே, தற்போது தமிழகத்தின் 20-வது மாநகராட்சியாக தாம்பரம் தரம் உயர்த்தப்பட்டதற்கான அறிவிப்பை அரசிதழில் அரசு வெளியிட்டுள்ளது.10 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், தாம்பரம் உள்ளிட்ட 5 நகராட்சிகள் மற்றும் ஐந்து பேரூராட்சிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது... பல்லாவரம், பம்மல், செம்பாக்கம், அனாகபுத்தூர் உள்ளிட்ட 5 நகராட்சிகள் ஆகும்..
சிட்லபாக்கம், பெருங்களத்தூர், திருநீர்மலை, பீர்க்கன்கரணை ஆகியவை உட்பட பேரூராட்சிகளாகும்.. தாம்பரம் மாநகராட்சியில் மேலும் 15 கிராம ஊராட்சிகளும் அடங்கும். இதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு தற்போது பிறப்பித்துள்ளது... ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், அடுத்த கட்டமாக நகராட்சி, பேரூராட்சி தேர்தல் நடைபெற உள்ளது.. எனவே, தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ள நிலையில், வார்டு வரையறை முடிந்த பிறகு நகராட்சி தேர்தல் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags :