தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம்.

by Editor / 08-11-2021 07:40:32pm
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம்.

தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கன மழையும், பிற மாவட்டங்களில் பரவலாக கனமழையும் பெய்து வருகிறது. இந்நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, மேலும் வலுவடைந்து வரும் 11-ம் தேதி வட தமிழகத்தை நோக்கி நகரும் என்றும், இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
மேலும், வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை பெரம்பூரில் 14 சென்டி மீட்டர் மழையும், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர், மதுராந்தகம், திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் தலா 13 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

 

Tags :

Share via