இளம்பெண்ணை பலாத்காரம் செய்த ஏட்டு சஸ்பென்ட்
மதுரையில் சினிமாவுக்குச் சென்று வீடு திரும்பிய பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த காவலர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த மகேஷ் குமார் அப்பகுதியில் பிளாஸ்டிக் பைப் கம்பெனி வைத்து பைப்கள் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இவரது கடையில் விவாகரத்து ஆன 25 வயது பெண் வேலை செய்து வருகிறார்.இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு செல்லூர் பகுதியில் உள்ள பிரபல திரையரங்கில் மகேஷ்குமார் மற்றும் அவருடைய கடையில் பணியாற்றும் ஒரு பெண் உள்ளிட்ட ஊழியர்கள் இரவு சினிமா பார்த்துள்ளனர்.
அனைவரும் வீடு சென்ற நிலையில் மகேஷ் குமார் பெண் ஊழியரை அழைத்துக் கொண்டு அவரது வீட்டில் விடுவதற்காக சென்று கொண்டிருந்தார். நள்ளிரவில் மதுரை நேதாஜி சாலை பகுதியில் சென்றுக்கொண்டிருந்த போது அங்கு இரவு பணியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த காவலர் ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் இருசக்கர வாகனத்தில் வந்த மகேஷ்குமார் மற்றும் அந்தப் பெண்ணை வழிமறித்து நிறுத்தியுள்ளார்.
அப்போது மகேஷ்குமார் தனது நிறுவனத்தின் விசிட்டிங் கார்டை கொடுத்து இந்த பெண் தனது நிறுவனத்தில் வேலை செய்வதாகவும் வீட்டில் விடுவதற்காக அழைத்துச் செல்வதாகவும் கூறியுள்ளார். ஆனால் அவர்களை மிரட்டிய அந்த காவலர் மகேஷ்குமார் வைத்திருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்துள்ளார் மேலும். அந்தப் பெண்ணை தானே ஆட்டோவில் வீட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி மகேஷ்குமாரை மட்டும் அனுப்பி வைத்துள்ளார்.
இந்த நிலையில் அந்தப் பெண்ணை வீட்டிற்கு அனுப்பாமல் தன்னுடன் அழைத்துச் சென்ற காவலர் அப்பெண்ணை மிரட்டி மறைவான இடத்தில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தொடர்ந்து அவரை ஆட்டோவில் ஏற்றி அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது..
வீட்டிற்கு தெரிந்தால் பிரச்சினையாகி விடும் என நினைத்து வந்த அந்த பெண் அடுத்த நாள் இது குறித்து தனது கடையின் உரிமையாளர் ஆன மகேஷ் குமார் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மகேஷ்குமார் சம்பந்தப்பட்ட காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திலகர் திடல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து மகேஷ் குமார் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் முருகனிடம் மேல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலியே பயிரை மேய்ந்த கதையாக விசாரணை என்ற பெயரில் இளம் பெண்ணை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த காவலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று காவலர் முருகனை காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா சஸ்பென்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Tags :