ஏடிஎம்மில் பணம் எடுக்க உதவி செய்வதுபோல நடித்து பணத்தை திருடிய பெண் கைது

by Editor / 07-12-2021 10:03:22pm
ஏடிஎம்மில் பணம் எடுக்க உதவி செய்வதுபோல நடித்து பணத்தை திருடிய பெண்  கைது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சன்னதித் தெருவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் என  ஐந்துக்கும் மேற்பட்ட வங்கிகள் செயல்பட்டு வருகிறது. மேலும் அதே தெருவில் 5-க்கும் மேற்பட்ட ஏடிஎம் மையங்களும் உள்ளது. 

இதில் வயதானவர்கள் மற்றும் படிப்பறிவில்லாதவர்கள் என ஏராளமானோர் பணம் எடுப்பதற்காக வந்து செல்கின்றனர். அவர்களுக்கு ஏடிஎம்மில் பணம் எடுக்க தெரியாததால் அவர்களது அறியாமையை பயன்படுத்தி எடிஎம் கார்டுகளை மாற்றிக் கொடுத்துவிட்டு பணம் திருடு போவதாக ஜெயங்கொண்டாம் காவல் நிலையத்திற்கு புகார் வந்த வண்ணம் இருந்தது. 

இந்நிலையில் குற்ற கண்காணிப்பு காவல்துறை உதவி ஆய்வாளர்  பழனி தலைமையிலான போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது  சந்தேகப்படும்படியாக  பெண் ஒருவர்  ஏடிஎம் வாசலில் நின்று கொண்டிருந்தார். அவரை விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
 
இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் கடலூர் மாவட்டம் பெரியார் நகரை சேர்ந்த உமாமகேஸ்வரி என்பது தெரியவந்தது. 

மேலும் அவர் ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுக்க வரும் படிப்பறிவில்லாத மற்றும் வயதானவர்களை குறிவைத்து பணம் எடுக்க உதவி செய்வதுபோல் நடித்து ஏடிஎம்கார்டை மாற்றி கொடுத்து பணம் திருடியது  தெரியவந்தது. 

இதையடுத்து  எத்தனை நபர்களிடம் ஏமாற்றி  எவ்வளவு பணம் எடுத்துள்ளார்.  என்பது குறித்து  விசாரித்து வருகின்றனர். 
 

 

Tags :

Share via