ஆழ்துளை கிணற்றில் விழுந்த 1 வயது குழந்தை பத்திரமாக மீட்பு.

by Editor / 17-12-2021 11:26:23am
ஆழ்துளை கிணற்றில் விழுந்த 1 வயது குழந்தை பத்திரமாக மீட்பு.

மத்திய பிரதேசத்தில் ஆழ்த்துளை கிணற்றுக்குள் விழுந்த ஒரு வயது குழந்தை பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டது. இந்தியா முழுவதும் வருடந்தோறும் ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் விழுந்து உயிரிழப்பதும், அவர்களை பல மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு மீட்பதும் நடைபெற்று தான் வருகிறது. 

கடந்த 2019-ம் ஆண்டு தமிழ்நாட்டில் மணப்பாறை அருகே 610 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தையான சுஜித் 82 மணி நேர போராட்டத்திற்கு பிறகும் கூட உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

வல்லரசு நாடாகா அகும் முயற்சியில் இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கும் வேளையில், ஒரு ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்பதற்கு போதிய தொழில்நுட்பங்களும், கருவிகளும் இல்லை என்பது தான் வருத்தத்திற்குரிய விஷயம். 
 
ஆனாலும் பல இடங்களில் அதிகாரிகளின் சாதுர்யத்தாலும், வீரர்களின் துணிச்சலாலும் பல குழந்தைகள் காப்பாற்றப் படுகின்றனர். அந்த வகையில், மத்திய பிரதேசத்தின் சத்தர்பூரில் உள்ள நவ்கான் காவல் நிலையத்திற்கு உட்பட்ட டவுனி என்ற கிராமத்தில் திவ்யான்ஷி என்ற ஒரு வயது குழந்தை தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தது. 

அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த 15 அடி ஆழ கிணற்றில் குழந்தை தவறி விழுந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மீட்பு பணியை தீவிரப்படுத்தினர். தலைமை செயல் அதிகாரி, தாசில்தார், ஆட்சியர் என பல அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

குவாலியர் பேரிடர் மீட்பு படையினர், மீட்பு குழுவினர், போலீசார், ராணுவ வீரர்கள் என பல வீரர்கள் சேர்ந்து, குழந்தை விழுந்த கிணற்றிற்கு அருகே ஜே.சி.பி. இயந்திரம் மூலம் 20 அடிக்கு பள்ளம் தோண்டி, பல மணிநேரப் போராட்டத்திற்கு பிறகு குழந்தையை நள்ளிரவில் பத்திரமாக உயிருடன் மீட்டனர்.

 

Tags :

Share via