மனைவியை கொன்று வீட்டுக்குள் மூட்டை கட்டி வைத்த கணவன்

by Admin / 22-12-2021 02:09:38pm
 மனைவியை கொன்று வீட்டுக்குள் மூட்டை கட்டி வைத்த கணவன்

சென்னை ஓட்டேரி ஏகாந்திபுரம் 4-வது தெருவில் வசித்து வருபவர் ரமேஷ். பூந்தமல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இவரது மனைவி வாணி. 41 வயதான இவர் சென்ட்ரல் அருகே உள்ள வால்டாக்ஸ் சாலையில் வீட்டு வேலை செய்து வருகிறார்.
 
கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வாணியுடன் ரமேஷ் தகராறு செய்தார். அப்போது ஏற்பட்ட மோதலில் வாணியை கத்தியால் குத்தி கொலை செய்தார்.

பின்னர் கை-கால்களை கட்டி உடலை மூட்டை கட்டினார். இதன் பிறகு அந்த மூட்டையை வீட்டில் உள்ள பெரிய மேஜைக்கு அடியில் தள்ளி மறைத்து வைத்தார்.

மனைவியை கொலை செய்வதற்கு முன்பாக தனது மகன்கள் கவுதம் (15), ஹரீஷ் (12) ஆகிய இருவரையும் ரமேஷ் திட்டமிட்டு தனது மாமியார் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதன் பின்னர் மனைவியை கொலை செய்து விட்டு அவர் தலைமறைவாகி விட்டார். பாட்டி வீட்டில் இருந்த கவுதம், ஹரீஷ் இருவரும் நேற்று இரவு வீடு திரும்பினார்கள்.

கொலை செய்யப்பட்டு தாயின் உடல் வீட்டுக்குள் இருப்பது தெரியாமல் இருவரும் செல்போனில் கேம் விளையாடி இருக்கிறார்கள். பின்னர் அந்த வீட்டிலேயே நேற்று இரவு தங்கி உள்ளனர்.

இன்று காலையில் வீட்டில் இருந்து அதிகளவு துர்நாற்றம் வீசியதையடுத்து அக்கம் பக்கத்தில் சென்று தெரிவித்தனர்.

அருகில் இருந்தவர்கள் வீட்டுக்குள் சென்று துர்நாற்றம் வீசிய இடத்தை பார்த்தனர். அப்போது மேஜைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாணியின் கொலை செய்யப்பட்ட உடலை வெளியில் எடுத்தனர்.

இதுபற்றி உடனடியாக ஓட்டேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மனைவியை கொலை செய்த ரமேஷ் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. ரமேசை பிடிப்பதற்காக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

புளியந்தோப்பு துணை கமி‌ஷனர் ஈஸ்வரன் அறிவுறுத்தலின் பேரில் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.

மனைவியை கொலை செய்து வீட்டுக்குள் அடைத்து வைத்து விட்டு கணவர் தப்பி சென்ற சம்பவம் ஓட்டேரி ஏகாந்திபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரமேசுக்கு குடிப்பழக்கம் இருந்ததும் அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இருப்பினும் எதற்காக அவர் மனைவியை கொன்றார் என்பது தெரியவில்லை.

ரமேஷ் பிடிபட்ட பிறகு அது தொடர்பாக விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். 

 

Tags :

Share via