கன்னியாகுமரி கடற்கரை கிராமங்களில் சுனாமி 17-ம் ஆண்டு நினைவு தினம்-நாளை அனுசரிப்பு.

by Editor / 25-12-2021 03:35:39pm
கன்னியாகுமரி கடற்கரை கிராமங்களில் சுனாமி 17-ம் ஆண்டு நினைவு தினம்-நாளை அனுசரிப்பு.


உலகில் ஆறாத வடுவை ஏற்படுத்திய ‘சுனாமி' 17-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கடற்கரை கிராமங்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நில நடுக்கத்தினால் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி சுனாமி பேரலை தாக்கியது.

 தமிழகம் இதுவரை கண்டிராத பெரும் உயிரிழப்பை சந்தித்தது.சுனாமி பேரலையில் சிக்கி கடற்கரை கிராமங்கள் சின்னாபின்னமானது. ஆயிரக்கணக்கான உயிர்களை கொத்து, கொத்தாக காவு வாங்கியது.இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மணக்குடி, அழிக்கால், கன்னியாகுமரி, சொத்தவிளை, குளச்சல், கொட்டில்பாடு, பிள்ளைத்தோப்பு உள்ளிட்ட கடற்கரை கிராமங்களிலும் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டது. அந்த கோர காட்சிகள் இன்னும் கண்முன்னே நிற்கிறது. சுனாமி பேரலை தாக்கிய 17-ம் ஆண்டு நினைவு தினம் நாளை (ஞாயிற்றுக்கிழமை)வருகிறது.

ஆறாத வடுவை ஏற்படுத்திய சுனாமி நினைவு தினத்தன்று ஒவ்வொரு வருடமும் கடற்கரை கிராமங்களில் இறந்தவர்களின் நினைவாக அஞ்சலி செலுத்தப்படுகிறது. அதன்படி நாளை குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது.

கொட்டில்பாட்டை சுற்றியுள்ள பகுதிகளில் சுனாமியால் 199 பேர் பலியானார்கள். அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் அருகில் சுனாமி நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சுனாமி நினைவு நாளில் அஞ்சலி செலுத்தப்படுகிறது.மேலும் கொட்டில்பாடு புனித அலெக்ஸ் சர்ச்சில் நினைவு திருப்பலி பங்குத்தந்தை ராஜ் தலைமையில் நடைபெறும்.

சுனாமியால் குளச்சல் பகுதியில் மட்டும் 414 பேர் பலியானார்கள். அவர்கள் அனைவருடைய  உடல்களும்  குளச்சல் காணிக்கை மாதா ஆலய வளாகத்தின் அருகில் அடக்கம் செய்யப்பட்டது. அவர்களின் நினைவாக நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் நினைவாக நாளை இரவு 7 மணிக்கு பங்குத்தந்தை மரிய செல்வன் தலைமையில் நினைவு திருப்பலியும், தொடர்ந்து கல்லறை மந்திரிப்பு நிகழ்ச்சியும் நடைபெறும். மேலும் பலியானவர்கள் நினைவாக அந்த ஸ்தூபியில் மலர்வளையம் வைத்தும், மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்படுகிறது. 

சுனாமி அலையின் போது குளச்சல் பகுதியை சேர்ந்த முஸ்லிம்கள் 34 பேர் பலியானார்கள். அனைத்து உடல்களும் ரிபாய் பள்ளிவாசல் வளாகத்தில் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via