இந்தியாவில் கொரோனா நிலவரம்- தினசரி பாதிப்பு மீண்டும்அதிகரிப்பு

by Admin / 29-12-2021 04:41:27pm
இந்தியாவில் கொரோனா நிலவரம்-  தினசரி பாதிப்பு மீண்டும்அதிகரிப்பு

கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 7,347 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 42 லட்சத்து 51 ஆயிரத்து 292 ஆக உயர்ந்தது.

நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் கொரோனா பாதிப்பும் திடீரென மீண்டும் உயர்ந்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,195 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.

கடந்த 8-ந்தேதி நிலவரப்படி தினசரி பாதிப்பு 9,419 ஆக இருந்தது. அதன்பிறகு 19 நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 9 ஆயிரத்திற்கும் கீழ் இருந்தது. இந்நிலையில் நேற்று மீண்டும் 9 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

மகாராஷ்டிராவில் தினசரி பாதிப்பு நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்றுமுன்தினம் ஆயிரத்தை தாண்டிய நிலையில் நேற்று மேலும் அதிகரித்துள்ளது. அதாவது அம்மாநிலத்தில் புதிதாக 2,172 பேருக்கு தொற்று உறுதியானது.

கேரளாவில் 2,475 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்குவங்கத்தில் 752, தமிழ்நாட்டில் 619, டெல்லியில் 496, குஜராத்தில் 394 பேர் நேற்று பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 48 லட்சத்து 8 ஆயிரத்து 886 ஆக உயர்ந்தது.

தொற்று பாதிப்பால் கேரளாவில் 244 பேர் உள்பட மேலும் 302 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4,80,592 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 7,347 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 42 லட்சத்து 51 ஆயிரத்து 292 ஆக உயர்ந்தது.

தற்போது 77,002 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த சில நாட்களாக புதிய பாதிப்பை விட நாள்தோறும் குணமடைபவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்து வந்தது. ஆனால் நேற்று புதிதாக சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை நேற்று முன்தினத்தை விட 1,546 கூடுதலாக உள்ளது.

நாடு முழுவதும் நேற்று 64,61,321 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 143 கோடியே 15 லட்சத்தை கடந்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் படி இதுவரை 67.52 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் 11,67,612 மாதிரிகள் அடங்கும்.

 

Tags :

Share via