தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரம் அனைத்து கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம்
அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
.தமிழகத்தில், கொரோனா நோய் தொற்று பரவல், தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதை கட்டுப்படுத்த, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, விவாதிப்பதற்காக, சென்னை, தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை, 10வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடந்தது.இந்த கூட்டத்தில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, அதிமுக சார்பில் ஜெயக்குமார், காங்கிரஸ் சார்பில் விஜயதாரணி, முனிரத்னம், பா.ஜ.,வின் நயினார் நாகேந்திரன் மற்றும் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கொரோனாவை தடுக்க, தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. எனது தலைமையிலான அரசில் வெளிப்படைத்தன்மை இருக்கும் என ஏற்கனவே கூறியிருந்தேன்.அனைத்து கட்சிகளின் ஆலோசனைகளை பெறவே இந்த கூட்டத்தில் இணைந்திருக்கிறோம்.. ஊரடங்கு கட்டுப்பாடுகளை கவனத்தில் கொள்ளாமல் சிலர் வெளியே வருகின்றனர். கொரோனா பாதித்தோர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் செலவை தமிழக அரசே ஏற்கும்18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த சர்வதேச அளவில் டெண்டர் விடுக்கப்பட்டு உள்ளது. சென்னை மட்டுமல்லாமல், பிற மாவட்டங்களிலும் ரெம்டெசிவிர் மருந்து கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துதல், கட்சி பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட அரசியல் நிகழ்வுகளை நிறுத்துவது, அனைத்துக்கட்சி பிரதிநிதிகளும் இடம் பெறும் வகையில் ஆலோசனைக் குழு அமைத்தல் உள்ளிட்ட ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை என்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
சென்னை காவல் ஆணையர் உடனான ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை மாநகராட்சியில் இன்று முதல் ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஊரடங்கு விதிகளை மீறுவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்க 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஓரிரு நாளில் தடுப்பூசி முகாம்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Tags :