பட்டாசு ஆலை விபத்து - உயிரிழந்த 4 பேர் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு - விபத்து தொடர்பாக 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு

by Editor / 25-02-2022 02:00:03pm
பட்டாசு ஆலை விபத்து - உயிரிழந்த 4 பேர் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு - விபத்து தொடர்பாக 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள துறையூர் கிராமத்தில் செஞ்சுரிபயர் ஒர்க்ஸ் என்ற தனியார் பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையை கோவில்பட்டி ராஜீவ் நகரைச் சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவரது மகன் பிரபாகரன் என்பவர் நடத்தி வருகிறார். இந்த ஆலையில் 24.02.22 மதியம் ஏற்பட்ட வெடி விபத்தில் கட்டிட அறை முற்றிலுமாக சேதமடைந்து தரைமட்;டமானது. இந்த இடிபாடுகளில் சிக்கி அங்கு பணிபுரிந்த ஈராட்சியை சேர்ந்த ராமர் , தொட்டம்பட்டியைச் சேர்ந்த ஜெயராஜ், குமாரபுரத்தைச் சேர்ந்த பொய்யாழிமகன் தங்கவேல் (43), நாலாட்டின்புதூரைச் சேர்ந்த கண்ணன் (48) ஆகிய 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தீயணைப்புத்துறையினர் 4 உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் சம்பவ இடத்தினை முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ, மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாராயணன், தாசில்தார் அமுதா, மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் குமார், கோவில்பட்டி டிஎஸ்பி உதயசூரியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

இந்த நிலையில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு நிர்வாகம் சார்பில் நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என்று உயிரிழந்தோர் குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாராயணன், தாசில்தார் அமுதா ஆகியோர் தலைமையில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் மற்றும் பட்டாசு ஆலை நிர்வாகத்தினர்  இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது சிஐடியூ தொழிலாளர் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் தங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் போலீசார் மறுக்கவே சிஐடியூ நிர்வாகிகள் மற்றும் உயிரிழந்த தொழிலாளர்களின் உறவினர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது மட்டுமின்றி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஒரு நிர்வாகி மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டார்.இதில் உயிரிழந்த ஒவ்வொரு தொழிலாளியின் குடும்பத்திற்கும் தலா 6 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கவும், இறுதிச் சடங்கு நிகழ்ச்சிக்கு ரூ 50 ஆயிரம் வழங்குவது மட்டுமின்றி, உயிரிழந்த தொழிலாளர்களின் குழந்தைகளின் உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைக்கல்வி முதலாம் ஆண்டு வரையிலான கல்வி செலவினை முழுவதுமாக ஏற்பதாக பட்டாசு ஆலை நிர்வாகம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. மேலும் அரசு சார்பில் கிடைக்கும் அனைத்து உதவிகளும் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனைத்தொடர்ந்து பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினர், உயிரிழந்தவர்களின் உடலை வாங்க சம்மதம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து  உடற்கூறாய்வு செய்யப்பட்டு நான்கு பேரின் உடல்களும் அவர்களின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையில் இந்த வெடி விபத்து தொடர்பாக துறையூர் கிராம நிர்வாக அலுவலர் அந்தோணிசெல்வி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆலையை நடத்திவரும் பிரபாகரன், மேலாளர் சீனிவாசன், மேற்பார்வையாளர்கள் திருநாவுக்கரசு, சூசை மிக்கேல் ஆகிய 4 பேர் மீது கொப்பம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
:

 

Tags :

Share via