விராட் கோலியை வாழ்த்தி பிசிசிஐ வெளியிட்ட சிறப்பு

by Admin / 03-03-2022 05:31:09pm
விராட் கோலியை வாழ்த்தி பிசிசிஐ வெளியிட்ட சிறப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி நாளை (மார்ச் 4) தனது 100-வது சர்வதேச டெஸ்ட் போட்டியை இலங்கையுடன் மோதுகிறார். இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

பிசிசிஐ சார்பில் விராட் கோலிக்கு ஒரு சிறப்பு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், கங்குலி, சேவாக் உள்ளிட்டோர் விராட் கோலிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

வீடியோவில் பேசி இருக்கும் சச்சின் ஆஸ்திரேலிய தொடரில் விளையாடியபோது தான் விராட் கோலி குறித்து முதலில் கேள்விப்பட்டேன். அனைவரும் அப்போது விராட் கோலி பற்றியே பேசினர். 

100வது டெஸ்ட்க்கு வாழ்த்துகள். இளைஞர்களின் ரோல் மாடல் நீங்கள். உங்களை பார்த்து பலர் கிரிக்கெட் விளையாட வந்துள்ளனர். அதுவே உங்களின் பெரிய சாதனை என பாராட்டினார்.

கங்குலி பேசுகையில், ''விராட் கோலி 10, 11 ஆண்டுகளுக்கு முன் தனது கிரிக்கெட் வாழ்க்கையை ஜூனியர் கிரிக்கெட்டிலிருந்து தொடங்கி இன்று பெரும் சாதனையை படைக்க உள்ளார். 

அவரது பயணம் மகத்தானது. பிசிசிஐ சார்பாகவும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் என்கிற முறையிலும் அவரை பாராட்டுகிறேன்'' எனக் கூறினார்.

ராகுல் டிராவிட் பேசுகையில், ''இந்திய அணியை தனி ஆளாக தூக்கி நிறுத்தியவர் விராட் கோலி, கேப்டனாக 5, 6 ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்டுள்ளார். 

100 டெஸ்ட் விளையாடி சராசரி 50க்கு மேல் வைத்திருப்பது எல்லாம் பெரும் சாதனை. விராட் கோலியின் உடல் தகுதியை பார்த்து சொல்கிறேன். அவர் இன்னும் நிறைய போட்டிகளில் விளையாடுவார் எனப் பாராட்டினார்.

 

Tags :

Share via