புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு பொறுப்பேற்றார்

by Editor / 30-06-2021 04:18:55pm
புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு பொறுப்பேற்றார்

 

தமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
தமிழ்நாட்டின் சட்டம் -ஒழுங்கு டிஜிபியாக இருந்த ஜே.கே.திரிபாதியின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, புதிய டிஜிபியாக, ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபுவை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. தொடர்ந்து, இந்த நிலையில் டிஜிபியாக பொறுப்பேற்க இன்று காலை 11 மணிக்கு சென்னை காமராஜர் சாலையிலுள்ள காவல் துறை தலைமை அலுவலகத்திற்கு வந்த சைலேந்திரபாபுவை அதிகாரிகள் வரவேற்றனர்.
பின்னர், திரிபாதியிடம் இருந்து பொறுப்புகளை சைலேந்திரபாபு பெற்றுக்கொண்டார். தமிழ்நாட்டில் 30வது டிஜிபியாக பொறுப்பேற்றுள்ள சைலேந்திரபாபு 2022 ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வரை நீடிப்பார். பின்னர் பேட்டியளித்த சைலேந்திரபாபு, காவலர்கள் பொதுமக்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் மனித உரிமைகளை மதித்து நடந்து கொள்வதற்கான பயிற்சியும் காவலர்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். பொதுமக்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் டிஜிபி சைலேந்திரபாபு கேட்டுக்கொண்டார்.இதனைத் தொடர்ந்து ஓய்வுபெற்ற திரிபாதி அமர்ந்திருந்த காரை பாரம்பரிய முறைப்படி அலங்கரிக்கப்பட்ட கயிறுகளை கட்டி வாசல் வரை இழுத்துச் சென்று அதிகாரிகள் பிரியாவிடை அளித்தனர்.

 

Tags :

Share via