தாக்குதலை மீண்டும் தொடங்கியது ரஷ்யா

by Admin / 06-03-2022 11:58:21am
 தாக்குதலை மீண்டும் தொடங்கியது ரஷ்யா

உக்ரைனில் ரஷியா கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி போா் தொடுத்தது. நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள முக்கியமான துறைமுக நகரமான கொ்சனை ரஷிய படையினா் கைப்பற்றினா். தென்கிழக்கில் உள்ள மரியுபோல் நகரம், டொனட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள வோல்னோவகா என்ற சிறிய நகரத்திலும் ரஷிய படையினா் தீவிர தாக்குதல் நடத்தினா். 

கடுமையான தாக்குதல் காரணமாக மரியுபோலில் மின்சாரம், தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மருந்துக் கடைகளில் மருந்துகள் தீா்ந்து மக்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனா். அங்கிருந்து வெளியேற பலா் முயற்சி மேற்கொண்டாலும், ரஷிய படையின் தாக்குதலால் அதிலும் சிக்கல் ஏற்பட்டது. 

இந்நிலையில், மரியுபோல், வோல்னோவகா நகரங்களிலிருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேற வசதியாக சண்டை நிறுத்தத்தை மேற்கொள்வதாக ரஷியா நேற்று காலையில் அறிவித்தது.
 
இந்த நிலையில், அந்நகரங்களிலிருந்து பொதுமக்கள் குறிப்பிட்ட வழித்தடம் வழியாக வெளியேறுவதற்கு வசதியாக, உள்ளூா் நேரப்படி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உக்ரைன் அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனா்.

இதுதொடா்பாக நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, சண்டை நிறுத்தம் மேற்கொள்ள ரஷியா சம்மதம் தெரிவித்தது. ஆனால், இந்த அறிவிப்பை மீறி பாதுகாப்பு வழித்தடத்தின் மீது ரஷியா ராக்கெட் குண்டுத் தாக்குதலை நடத்துவதாக உக்ரைன் குற்றம்சாட்டியது. இதன் காரணமாக, பொதுமக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் மரியுபோல் அதிகாரிகள் தெரிவித்தனா்.

எனினும், தங்கள் மீது உக்ரைன் ஆதரவுப் படையினா் தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாகவே ராக்கெட் குண்டுவீச்சு நடத்தியதாக ரஷியா கூறியது. பின்னா் ரஷிய தரப்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், உக்ரைனில் தாக்குதலை விரிவுபடுத்தியுள்ளதாகவும், மரியுபோல், வோல்னோவகா நகரங்களில்  தாக்குதலை மீண்டும் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via