தட்டுப்பாட்டினால் தடுப்பூசித் திட்டம்  தடுமாறுகிறது: ப.சிதம்பரம் கண்டனம் 

by Editor / 16-05-2021 04:37:08pm
 தட்டுப்பாட்டினால் தடுப்பூசித் திட்டம்  தடுமாறுகிறது: ப.சிதம்பரம் கண்டனம் 



தடுப்பூசி தட்டுப்பாட்டினால் தடுப்பூசித் திட்டம் தடுமாறுகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், இரண்டாம் அலையின் போது அரசின் அணுகுமுறை உண்மைகளை மறுப்பது மற்றும் மறைப்பது, பொறுப்பிலிருந்து நழுவிக் கொள்வது தாம். விளைவு: பெருங் குழப்பம்.
பெருந் தொற்றைக் கட்டுப்படுத்தவதற்கு I.C.E. என்ற மும்முனை அணுகுமுறை வேண்டும், அது அரசிடம் இல்லை. முதல் அலையின் போது சுயவிளம்பரமும் வெற்றிக்களிப்புமே இருத்தன.
மூன்றாம் அலை, நான்காம் அலை வந்தால் அவற்றைச் சந்திப்பதற்கு அரசிடம் எந்தத் திட்டமும் கிடையாது.
இரண்டாவது அலை தொடங்கிய போது இதுவும் முதல் அலை போன்று மெதுவாக உயர்ந்து, சமநிலைக்கு வந்து, பிறகு ஓய்ந்து விடும் என்று அரசு கருதியது. ஆகவே, இரண்டாம் அலையின் வேக உயர்வுக்கும் பரவலுக்கும் அரசிடம் எந்தத் திட்டமுமில்லை.எதிர்கால தேவைகளுக்கு - ஆக்ஸிஜன், வென்டிலேட்டர், தடுப்பூசிகள், வாகனங்கள் - திட்டமிடவில்லை. தேவையான செவிலிகளை வேலையமர்த்த எந்தத் திட்டமும் இல்லை.
தடுப்பூசி போட்டதின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஏப்ரல் 2ம் நாள் 42 இலட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டன. ஆனால் ஏப்ரல் மாத நாள் சராசரி 30 இலட்சமே. மே மாதத்தில் இதுவரை நாள் சராசரி 18 இலட்சம் தான். தடுப்பூசி தட்டுப்பாட்டினால் தடுப்பூசித் திட்டம் தடுமாறுகிறது.
முதல் அலை ஓய்ந்த போது பரிசோதனைகள் தொய்வடைந்தன. பரிசோதனை மாதிரிகள் குறையும் போது புதிய நோயாளிகளின் எண்ணிக்கையும் குறையும் தானே? வெயில் அடித்த போது கூறையை செப்பனி செய்யவில்லையென்றால், அட மழை பெய்யும் போது கூறை ஒழுகும் தானே?
கரோனா முதல் அலையின் போது உருவாக்கப்பட்ட கூடுதல் மருத்துவ கட்டமைப்புகள் அக்டோபர் 2020 க்குப் பிறகு பராமரிக்கப்படவில்லை. இரண்டாவது அலை தொடங்கியபோது எஞ்சியிருந்த கட்டமைப்புகள் போதுமானவை அல்ல என்பது அம்பலமாகியது.அதிசயம் ஆனால் உண்மை. இவையெல்லாம் அரசு செய்யத் தவறியவை.நான்கு கட்டமாக 102 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு ஒவ்வொரு கட்டத்திலும் எவ்வளவு தடுப்பூசி தேவைப்படும் என்ற எளிய கணக்க மத்திய அரசு போடத் தவறியது.
மூன்றாவது தடுப்பூசிக்கு (ஸ்புட்னிக்) 12-04-2021 அன்று தான் பயன்பாட்டு அனுமதி தரப்பட்டது. வேறு எந்தத் தடுப்பூசிக்கும் இதுவரை பயன்பாட்டு அனுமதி தரப்படவில்லை, இறக்குமதியும் ஆகவில்லை.
பைசர் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்காமல் இழுத்தடித்தார்கள். ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு 12-4-2021 அன்று தான் அனுமதி கொடுத்தார்கள். வேறு வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு இதுவரை அனுமதி தரப்படவில்லை. இந்தியாவுக்கு அவை எப்படிக் கிடைக்கும்? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories