மாநகராட்சி எடுத்த அதிரடி முடிவு

by Staff / 25-03-2022 03:25:00pm
 மாநகராட்சி எடுத்த அதிரடி முடிவு

மும்பை மாநகராட்சி நிர்வாகம் (BMC) மற்றும் மும்பை மெட்ரோ ஒன் பிரைவேட் லிமிடெட்  இடையே சொத்து வரி தொடர்பாக தகராறு எழுந்துள்ளது. மாநகராட்சி பணியாளர்கள் நேற்று அந்தேரியில் (டபிள்யூ) டிஎன் நகர் மெட்ரோ ரயில் நிலையம் உட்பட மும்பை மெட்ரோ ஒன் பிரைவேட் லிமிடெட்-க்கு சொந்தமான 16 சொத்துக்களை பார்வையிட்டனர்.

இந்த இடங்களுக்கு 2013 முதல் சொத்து வரி செலுத்தவில்லை என புகார் எழுந்தது. மும்பை மெட்ரோ மாநகராட்சிக்கு ரூ.300 கோடிக்கு மேல் சொத்து வரி செலுத்த வேண்டியுள்ளது. இதையடுத்து குடிநீர் விநியோகத்தை நிறுத்தி வைக்க மாநகராட்சி முடிவு செய்தது.

குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் இணைப்புகளை துண்டிப்பது என்பது வரி செலுத்தாதவர்களுக்கு எதிராக மாநகராட்சி எடுக்கும் வழக்கமான நடவடிக்கையாகும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். 

மும்பை மெட்ரோ நிர்வாகம் மாநகராட்சி சார்பில் தங்களுக்கு வழங்கப்பட்ட நோட்டீஸ்களை திரும்பப் பெறவும், சொத்து மற்றும் நகராட்சி வரிகளை செலுத்துவதில் இருந்து தங்களுக்கு விலக்கு அளிக்கும் மாநில அரசின் உத்தரவுகளை அமல்படுத்தவும் மாநகராட்சியிடம் கோரிக்கை வைத்துள்ளது. 

மேலும் அடுத்த கட்ட முடிவு குறித்து தெரிவிக்க இரண்டு நாட்கள் அவகாசம் கோரியதால், தண்ணீர் வினியோகம் தற்போது நிறுத்தப்படவில்லை என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரண்டு நாட்களுக்குள் அவர்கள் நிலுவைத் தொகையைச் செலுத்தத் தவறினால், நாங்கள் தண்ணீர் இணைப்புகளை துண்டிப்போம். நெறிமுறையின்படி தேவையான நடவடிக்கைகளை எடுப்போம், ”என்று உதவி முனிசிபல் கமிஷனரும், மதிப்பீடு மற்றும் சேகரிப்பு (ஏ&சி) துறையின் பொறுப்பாளருமான விஸ்வாஸ் மோட் கூறினார்.

மும்பை மெட்ரோ ஆனது 'பிரைவேட் லிமிடெட்' அமைப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் 74 சதவீதப் பங்குகள் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சருக்குச் சொந்தமானதாகவும், மீதமுள்ள 26 சதவீதம் மும்பை பெருநகரப் பகுதி மேம்பாட்டு ஆணையத்திடம் இருப்பதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via