பணமில்லா பரிமாற்றத்தில் ரயில் பயணச்சீட்டு வழங்கும் தானியங்கி இயந்திரங்கள்

முன் பதிவற்ற பயணச்சீட்டுகள் பெறுவதில் உள்ள கூட்ட நெரிசலை தவிர்க்க, ரயில் நிலையங்களில் ரயில் பயணச்சீட்டு தானியங்கி இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. மதுரை கோட்டத்தில் மதுரை திருநெல்வேலி தூத்துக்குடி கோவில்பட்டி விருதுநகர் திண்டுக்கல் ராமேஸ்வரம் தென்காசி ராமநாதபுரம் சிவகங்கை மானாமதுரை புனலூர் ஆகிய ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்களில் ஸ்மார்ட் கார்டு மற்றும் பண மதிப்பை செலுத்தி பயணச்சீட்டு பெறப்பட்டு வந்தது. தற்போது புதிய முயற்சியாக பணமில்லா பரிமாற்றம் மற்றும் மின்னணு பணப் பரிமாற்றத்தை ஊக்குவிக்க க்யூ ஆர் கோட் (Quick Response code) பயன்படுத்தி பயணச்சீட்டு பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி பயணச்சீட்டுகள், பிளாட்பாரம் டிக்கெட்கள் ஆகியவை பெற்றுக்கொள்ள முடியும். மேலும், இதன் மூலம் ரயில்வே சீசன் டிக்கெட்களையும் புதுப்பித்துக் கொள்ளலாம். ஸ்மார்ட் கார்டுகளிலும் பணப்பற்று செய்துகொள்ளலாம். பயணச்சீட்டு இயந்திரங்களில் பயண விவரங்களை பதிந்தவுடன், பணம் செலுத்தும் முறைகளான ஸ்மார்ட் கார்டு மற்றும் 2 க்யூ ஆர் கோட் பட்டியல் திரையில் தோன்றும். திரையில் கண்ட 2 க்யூ ஆர் கோட்களில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்தவுடன், க்யூ ஆர் கோட் திரையில் தோன்றும். அதை அலைபேசி செயலிகள் வாயிலாக ஸ்கேன் செய்து மின்னணு பணப் பரிமாற்றம் செய்யலாம். கட்டணத் தொகையை செலுத்தியவுடன் ரயில் பயணச்சீட்டு வெளியே வரும். க்யூ ஆர் கோடு பயன்படுத்தி ஸ்மார்ட் கார்டுகளில் பணப்பற்று செய்துகொள்ளலாம். கியூ ஆர் கோட் ஐ பயன்படுத்தி எப்படி பயணசீட்டு பெறுவது என்பதை காட்சியாக https://www.youtube.com/watch?v=BEClkHPnQmU என்ற இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம். பணமில்லா பரிமாற்றம் பற்றிய விபரங்களை அறிந்துகொள்ள அல்லது ஏதாவது குறைபாடு பற்றி புகார் செய்ய "ரயில் மதாத்" செயலி அல்லது தொலைபேசி எண் 139 ஐ தொடர்பு கொள்ளவும். நீண்ட வரிசையில் நிற்காமல் நேரத்தை மிச்சப்படுத்த தானியங்கி பயணச் சீட்டு எந்திரங்களை பயன்படுத்தும்படி பயணிகளை ரயில்வே நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
Tags : Automatic machines for issuing train tickets in cashless transaction