தமிழில் உறுதிமொழி ஏற்று பரபரப்பை ஏற்படுத்திய கேரள எம் எல் ஏ 

by Editor / 24-07-2021 06:59:57pm
தமிழில் உறுதிமொழி ஏற்று பரபரப்பை ஏற்படுத்திய கேரள எம் எல் ஏ 

 

கேரளாவில் ஆளும் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ள வழக்குரைஞரான ஏ. ராஜா, தனது தாய்மொழியான தமிழ்மொழியில் எம்எல்ஏ ஆக பதவியேற்றுள்ளது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பான நிலையில், அவற்றை பதிவு செய்த பலர்  பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


தோட்டத் தொழிலாளர்களான அந்தோணி லக்ஷ்மன் - ஈஸ்வரி தம்பதிக்கு 1984ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி ராஜா மகனாக பிறந்தார். கேரள சட்டப்பேரவைக்கு முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இவர் கோயம்புத்தூர் சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று வழக்குரைஞராக இருந்து வருகிறார்.


இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவருமான சு. வெங்கடேசன்,"கேரள சட்டமன்றத் தேர்தலில் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் சட்டமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தோழர் வழக்கறிஞர் ராஜா அவர்கள் தனது தாய்மொழியான தமிழில் உறுதிமொழி கூறி பதவியேற்றார். அவருக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.


இது குறித்து  ஏ. ராஜா கூறியதாவது , "திருப்பூர் - தேனி ஆகிய தமிழ்நாட்டின் மாவட்டங்களோடு எல்லையை பகிர்ந்து கொள்ளும் மற்றும் ஏராளமான தமிழ் மக்கள் வாழ்கின்ற தேவிகுளம் தொகுதியில் பிறந்து வளர்ந்த நான் என் தாய்மொழியாகிய தமிழ் மொழியில், வேறொரு மாநிலத்தின் சட்டமன்றத்தின் பதவியேற்றத்தை பெருமையாக கருதுகிறேன். தமிழ் மொழியில் பதவியேற்க வேண்டுமென்பது என் தனிப்பட்ட ஆர்வம். அதற்காக கேரள சட்டப்பேரவை செயலாளரிடம் முன்னரே விருப்பம் தெரிவித்து அனுமதியும் பெற்று விட்டேன்.

இதுமட்டுமின்றி, என் தொகுதியில் மலையாளம் பேசும் மக்களுக்கு ஈடான அளவில் பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பேசும் மக்களும் உள்ளனர். அவர்களின் பிரதிநிதியாக தமிழ் மொழியில் பதவியேற்றது எனக்கு மகிழ்ச்சி.நான் மட்டுமல்ல, என் பெற்றோரும் தேவிகுளத்தில்தான் பிறந்தனர். எனினும், எங்களது தமிழ் மொழியுடனான பிணைப்பு தொடர்ந்து வந்துள்ளது. குறிப்பாக, நான் கேரளாவில் பள்ளிக்கல்வி முழுவதையும் தமிழ்வழியில்தான் படித்து முடித்தேன். இதைத்தொடர்ந்து கோயம்புத்தூர் அரசு சட்டக்கல்லூரில் சட்டம் பயின்றபோதும் தமிழில்தான் படித்தேன் என்று கூறினார்.


 

 

Tags :

Share via