நியாயவிலைக் கடைகளில்  டோக்கன் வழங்கும் பணி தொடக்கம் தமிழக அரசு அறிவிப்பு 

by Editor / 01-06-2021 05:55:52pm
 நியாயவிலைக் கடைகளில்  டோக்கன் வழங்கும் பணி தொடக்கம் தமிழக அரசு அறிவிப்பு 


நியாயவிலைக் கடைகளில் வரும் 5-ஆம் தேதி முதல் பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன. இதற்கான டோக்கன்கள் வழங்கும் பணி  தொடங்கியுள்ளது.
நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வாங்குவதற்கான டோக்கன்கள் ஜூன் 4-ஆம் தேதி வரை வீடு வீடாகச் சென்று வழங்கப்படுகிறது. அதன்படி, டோக்கனில் குறிப்பிட்டிருக்கும் நாளில், பொதுமக்கள் நியாயவிலைக் கடைக்குச் சென்று பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு 200 டோக்கன்களுக்கு பொருள்கள் வழங்கும் வகையில், திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் ஒரே நேரத்தில் அதிகமானோர் நியாயவிலைக் கடைக்குச் செல்வது தவிர்க்கப்படும்.
இதுகுறித்து,  அரசு  வெளியிட்ட அறிவிப்பில், கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த கால கட்டத்தில் பொது மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு நியாயவிலைக் கடைகளை தினமும் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. கொரோனாநோய்த் தொற்று காலம் என்பதால், பொருள்களை வழங்க கடந்த மாதங்களில் பின்பற்றப்பட்ட நடைமுறையே ஜூன் மாதத்திலும் கடைப்பிடிக்கப்பட உள்ளது.
ஜூன் மாதத்துக்கான பொருள்களை குடும்ப அட்டைதாரா்கள் பெற்றிடுவதற்கான டோக்கன்கள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 1) முதல் ஜூன் 4-ஆம் தேதி வரையில் நான்கு தினங்களுக்கு அளிக்கப்படும். இதன்பின் ஜூன் 5-ஆம் தேதியில் இருந்து நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் விநியோகிக்கப்படும். நாளொன்றுக்கு 200 குடும்ப அட்டைதாரா்களுக்கு மட்டும் பொருள்கள் அளிக்கப்படும். அவா்கள் பொருள்களை பெற்றுக் கொள்வதற்கான நாள், நேரம் ஆகிய விவரங்கள் டோக்கன்களில் குறிப்பிடப்பட்டு இருக்கும்.
நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் பொருள்களில் துவரம் பருப்பு மட்டும் ஜூன் 7-ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும். முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைப் பின்பற்றியும் நியாய விலைக் கடைகளில் பொருள்களைப் பெற வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via